புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவகத்துக்கு நிலம் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு நன்றி தமிழக அரசு தகவல்

ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவகத்துக்காக நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய
அரசு நன்றி தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நல்லடக்கம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
ராமேசுவரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம், கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் அன்பு பாராட்டப்பட்ட இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும், இந்தியாவின் மிக உயர் விருதான பாரத ரத்னா விருதை பெற்றவராகவும், அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் திருமகனாகவும் விளங்குகிறார்.
அவரது திடீர் மறைவினை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த வேதனையுற்றார். அதோடு, அப்துல்கலாமின் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நடைபெறவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, உடனடியாக அரசு இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, அவரது நல்லடக்கம் ராமேசுவரத்தில் 30-7-15 அன்று நல்ல முறையில் நடைபெற்றது.
நினைவகம்
கடந்த 7-8-15 அன்று பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தபோது, அப்துல் கலாமை நல்லடக்கம் செய்த இடத்தில் மத்திய அரசின் சார்பில் தேசிய நினைவகம் அமைக்க உள்ளதாகவும், அதற்காக தமிழ்நாடு அரசு தேவையான நிலத்தினை வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேவையான நிலத்தை வழங்க ஆணை பிறப்பித்தார். 13-8-15 நாளிட்ட கடிதத்தில் மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை செயலர், நினைவகம் அமைக்கத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய கடிதம் எழுதினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், பாம்பன் குரூப் கிராமம், புல எண்149/1-ல் 0.55.0 தீ ஹெக்டேர் (1.36 ஏக்கர்) நிலம், 2-9-15 தேதியிட்ட வருவாய்த்துறை, அரசாணையின்படி நிலக்கிரயமின்றி மத்திய அரசுக்கு நிலமாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு நன்றி
அப்துல்கலாமின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அப்துல்கலாமுக்கு ராமேசுவரத்தில் மத்திய அரசு நினைவகம் அமைக்கும் என்று அறிவித்தார். நினைவகம் அமைப்பது குறித்து ஒரு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழுவின் முதல் கூட்டம் 6-11-15 அன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, அப்துல்கலாமுக்கு நினைவகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ad

ad