புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை


தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘‘சீமென்கார்டு ஓகியா’’ என்னும் அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11–ந் தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பல் 12–ந் தேதி கரைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பு அதிகாரிகளும் பிடிபட்ட கப்பல் மாலுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் ஆக மொத்தம் 35 பேரை கைது செய்தனர். அவர்களில் இந்தியர்கள் 12 பேர், எஸ்தோனியா நாட்டினர் 14 பேர், பிரிட்டன் நாட்டினர் 6 பேர், உக்ரைந் நாட்டினர் 3 பேர்.

இந்த வழக்கு ‘கியூ’ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.‘கியூ’ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 680 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று ஆயுத கப்பலுக்கு டீசல் வினியோகம் செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 41 பேருக்கு கடந்த 14–2–14 அன்று 2 ஆயிரத்து 169 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் 3 பகுதிகளை கொண்ட புத்தகமாக வழங்கப்பட்டது.

டீசல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தனியாக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கப்பல் மாலுமிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் படைக்கல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 10–7–14 அன்று மதுரை உயர்நீதிமன்றம் படைக்கல சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ‘கியூ’ பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 1–7–15 அன்று உச்சநீதிமன்றம் மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கீழ் கோர்ட்டு இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

அப்போது இந்த வழக்கில் இதுவரை ஆஜராகாத கப்பல் நிறுவனம் மற்றும் இயக்குனர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மீதம் உள்ள 43 பேர் மீதான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி 12–8–15 முதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. 24–8–15 அன்று 43 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.  இதில் கப்பல் கேப்டன் டுட்னிக் வாலண்டைன், தலைமை என்ஜினீயர் லலித்குமார் குராங், தலைமை அதிகாரி சிடரன்கோ வாலேரி, 2ம் நிலை அதிகாரி ராதேஷ்தர் திவேரி ஆகிய 4 பேர் மீதும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்து இருத்தல், உரிமம் இன்றி ஆயுதங்கள் வைத்து இருத்தல், ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைதல், மற்றும் சட்டவிரோதமாக டீசல் விற்பனை, வாங்குதல் ஆகிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கப்பலில் இருந்த மற்ற 31 பேர் மீதும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்து இருத்தல், உரிமம் இன்றி ஆயுதங்கள் வைத்து இருத்தல், ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற 8 பேர் மீதும் சட்டவிரோதமாக டீசல் விற்பனை, வாங்குதல் ஆகிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது 43 பேரும் குற்றத்தை மறுத்து விசாரணை நடத்த கோரினர்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 69 சாட்சிகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 44 சாட்சிகள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, போலீஸ் தரப்பில் துப்பாக்கி, தோட்டா, கப்பல் உள்பட 65 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே போன்று எதிர் தரப்பிலும் பாஸ்போர்ட் உள்பட 65 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சாட்சி விசாரணை முடிக்கப்பட்டு கடந்த மாதம் 14–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை வக்கீல்கள் வாதம் நடந்தது. இதில் அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், சிறப்பு அரசு வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். எதிர் தரப்பில் வக்கீல்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ஆறுமுகராம், ஜவகர், ஜூடுபொன்னையா, பெரியசாமி, பூங்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.

உச்சநீதிமன்றம் வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி வருகிற 23–ந் தேதிக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் வழக்கில் வக்கீல்களின் வாதங்கள் முடிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி ராஜசேகர் அறிவித்திருந்தார்.

இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்கள். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு வழங்கினார்.

அதில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கப்பலில் கொண்டு வந்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் 12 பேர் வெளிநாட்டினர் 23 உள்பட 35 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்கள் 35 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.  கப்பல் ஊழியர்களுக்கு டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

ad

ad