புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

சஞ்சய்தத் விடுதலையாகும் விவகாரம் : எரவாடா சிறை அதிகாரியிடம் தகவல் கேட்டு பேரறிவாளன் மனு



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், எரவாடா சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில்,   ‘’ஆயுத சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, தற்போது எரவாடா மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் வருகிற பிப்ரவரி மாதம் 27–ந்தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்படவுள்ளதாக பத்திரிகைகளில் கடந்த 7–ந்தேதி செய்தி வெளியாகியுள்ளது. எனவே சஞ்சய்தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் எனக்கு வழங்கவேண்டும்.

நடிகர் சஞ்சய் தத், நல்லொழுக்கம் காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது, அது தொடர்பான அனைத்து ஆவணங் களையும் எனக்கு வழங்கவேண்டும். 

அதேபோல, சஞ்சய் தத், அரசியலைப்பு சட்டத்தின் பிரிவு 161–ன் கீழ் முன் கூட்டியே விடுதலை செய்யப்படுகிறாரா? அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவுகளின் கீழ் அல்லது மராட்டிய மாநில சிறை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுகிறாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும். அது தொடர்பான ஆவணங்களின் நகலையும் எனக்கு வழங்க வேண்டும்.

நானும் இதே சட்டப்பிரிவுகளின் கீழ் முன்கூட்டியே விடுதலை பெறுவதற்காக இந்த விவரங்களை கேட்கிறேன். அதனால், இந்த ஆவணங்கள் அனைத்தும் 48 மணி நேரத்தில் எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கான செலவு தொகையை வழங்கவும் தயாராக உள்ளேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.  ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நல்லொழுக்கம் அடிப்படையில், வருகிற பிப்ரவரி 27–ந்தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளார். இந்த முடிவை எரவாடா சிறை கண்காணிப்பாளர் எடுத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் மராட்டிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சஞ்சய் தத் எந்த சட்டத்தின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்? என்ற கேள்வியுடன் எரவாடா சிறை கண்காணிப்பாளருக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு, பேரறிவாளன் மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad