வியாழன், ஜனவரி 14, 2016

பெண்களிடம் வட்டிக்கு பதிலாக பாலியல் சுகத்தைக் கேட்கும் நிதி நிறுவனங்கள் ; இணையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. 

சுய தொழிலுக்காக நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கிவிட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாக இணையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளினால் இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இணையத்தின் தலைவரான வி.கமலதாஸ் தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப் பிரதேசங்களிலும் பின் தங்கிய கிராமங்களிலுமே இந்த நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். போருக்கு பின்னரே மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன. 
தமது இணையத்தில் அங்கத்துவம் பெறும் 17 அமைப்புகளுக்கு மட்டும் தங்களால் 2 கோடி ரூபாய் நுண்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், குறித்த நிதி நிறுவனங்களினால் ஆகக்குறைந்தது 60 கோடி ருபாய் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி சில அதிகாரிகளினால் கொடுக்கப்படும் நெருக்கடிகளினால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 
குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார். 
இவரது இந்த புகார்கள் குறித்து அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்ற கூட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் தான் தொடர்பு கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் பதில் அளித்தார்.