புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2016

பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?

ட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக் கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு
மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பழ.கருப்பையா எம்.எல்.ஏ (துறைமுகம் சட்டமன்றத் தொகுதி), கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்"
-இப்படி ஆற அமர ஒரு நடவடிக்கையை எடுத்து அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா.

பொதுவாக புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கோட்டையில், அடுத்த நிமிடமே தண்டனை அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் கருப்பையா.

ஜனவரி 14, அதுவும் பொங்கலையொட்டிய நாளாகப் பார்த்து, எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கூடியிருந்த 'துக்ளக்' ஆண்டுவிழா மேடையில் நின்றபடி சொந்தக் கட்சி மீது காரித் துப்பியிருக்கிறார் கருப்பையா. இதற்காக அன்றைக்கே 'உதிர்ந்த' என்று ஓர் 'உயர்ந்த' டயலாக்கை எடுத்துவிட்டு, தூக்கி வீசியிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக கருணை காட்டியதற்காகவே, புரட்சித் தலைவியை புகழ்ந்துரைத்தே ஆக வேண்டும்.

பழ.கருப்பையா எனும் கதர் சட்டைக்காரர், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க-வில் சேர்த்து அரவணைத்து, அவருக்கு எம்.எல்.ஏ பதவியையும் கொடுத்து அழகு பார்த்தவர், ஜெயலலிதா.

ஆனால், கடந்த 5 ஆண்டு காலமும் கட்சியின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, எம்.எல்.ஏ என்கிற பதவிக்கு உள்ள சம்பளம் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, ஆட்சி முடியும் கடைசி நேரத்தில், கட்சி மீதே காறி உமிழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவர்களை எப்படி ஒரு கட்சித் தலைமையால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? சரத்குமாராலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே?!

அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போட்டதற்காகவே ஆட்டோவில் ஆட்களை அனுப்பி அடித்து உதைக்கப்பட்ட வக்கீல் கே.எம் விஜயன், தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ஓடஓட விரட்டப்பட்ட தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன், உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க மகளிரணியால் 'அற்புதமான' வரவேற்பு கொடுக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி, அடியாட்களால் அரிவாளால் வெட்டப்பட்ட தி.மு.க வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆசிட் வீசி முகம் கருக்கப்பட்ட சந்திரலேகா ஐ.ஏ.எஸ் இவர்களை யெல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால், பழ.கருப்பையாவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா என்ன?
ஒரு கட்சி என்றால்... அதற்கு கொள்கை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் இருப்பது வாடிக்கை. அதையெல்லாம் குலைப்பதற்கு என்ன தைரியம், நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் இந்த கருப்பையா போன்றவர்களுக்கு? இந்தக் கொள்கை, கோட்பாடு, கண்ணியம், கண்றாவியெல்லாம் ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, அத்தனை கட்சிகளுக்குமேதான் உண்டு.

தம்பி ஸ்டாலினுக்கு போட்டியாக லொள்ளு பண்ணிக் கொண்டிருந்தால், அது கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அதனால்தானே அண்ணன் அழகிரியையே, அதாவது தன் மூத்த மகனையே, அதாவது தான் வீரத்துடன் இருந்த காலத்தில் பிறந்த பிள்ளையாகிய அழகிரியையே கட்சியை விட்டு நீக்கி வைத்திருக்கிறார், தமிழனத் தலைவர்.
இவ்வளவு ஏன்? லென்ஸ் வைத்து தேடவேண்டிய நிலையிலிருக்கும் சரத்குமார் கட்சிக்கும்கூட கண்ணியம், கத்திரிக்காய் கூட்டெல்லாம் உண்டு என்று சமீபத்தில் தெரியப்படுத்தியிருக்கிறாரே... தன்னுடன் இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான எர்ணாவூர் நாராயணனை தூக்கி அடித்துள்ளார்.
சரி, கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும்... கோட்பாடுகளுக்கும் முரணாக; கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் எதையெல்லாம் செய்திருக்கிறார் பழ.கருப்பையா என்று பார்ப்போமா?!

கொள்கை மீறல்!
எதிர்க்கட்சி பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் உட்கார்ந்து கொண்டு, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ என்று பேசியிருக்கிறார்.
எதிர்க்கட்சிக்காரனை பார்த்தால்... அடித்து உதைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவனுடைய வேட்டியையாவது உருவ வேண்டும். இதுதான் முக்கியமான கொள்கையே. ஆனால், எதிர்க்கட்சிக்காரர்களுடனேயே சேர்ந்து கொண்டு, கொள்கையை குழிதோண்டி புதைக்க முற்பட்டால் கோபம் வராதா என்ன?

குறிக்கோளுக்கு குழிதோண்டல்!
"கொள்ளையடிப்பது ஒன்றே அரசியலின் இலக்கு. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்; மூன்று 'கீப்’கள்; இரண்டு கார்கள். கவுன்சிலரே இப்படி என்றால், எம்.எல்.ஏ-க்கள் எப்படி, மந்திரிகள் எப்படி என நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அவர்களும் கிடைத்தவரை ஆதாயம் எனக் கொள்ளையடிக்கிறார்கள். பி.ஆர்.பி-யின் பையிலும், வைகுண்டராஜன் பையிலும் இல்லாத அரசியல்வாதி யார், அதிகாரி யார் என்பதைத் தேடவேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம்’’

கட்சிகளின் குறிக்கோளே... இப்படி கொள்ளையடிப்பதுதான். இதைப் பற்றியே கட்சிக்குள் இருந்துகொண்டு நாக்குமேல் பல்லைப் போட்டு பேசிய பழ. கருப்பையாவின் பல்லைத் தட்டாமல் எப்படி விடமுடியும்?

குண்டக்க மண்டக்க கோட்பாடு!
"எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு, மேசையைத் தட்டலாம்; கமிஷன் வாங்கலாம்; ஊரை அடித்து உலையில் போடலாம். இதுதான் இன்று எம்.எல்.ஏ-க்களின் தலையாயப் பணி.’’ இதுதான் கட்சிகளின் கோட்பாடு. அடிமடியிலேயே பழ. கருப்பையா கை வைக்கப்பார்த்தால், விறுவிறுக்கும் கைகளை வைத்துக் கொண்டு பூப்பறிக்கவா முடியும்?
ஐயோ கண்ணியம்!
"காசு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது எனப் பழக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ பரிந்துரைப்பதற்கு எதுவுமே இல்லை. பணம் பரிந்துரைக்கும் ஓர் அமைப்பில் எம்.எல்.ஏ-வாக நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. தொகுதி மக்களுக்குச் செய்ய நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை. சட்டவிரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள். மனப்பூர்வமாகப் பணியாற்ற நினைத்தேன். அதற்கு இடம் இல்லை. என் எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்’’

நன்றாக படித்துப் பாருங்கள்... தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரநிதிகளின் கண்ணியமே இப்படியெல்லாம் 'ஊருக்கு உழைக்கத்தான்'. மேலிடங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தால்தானே அவர்களால் கண்ணியமாக கட்சியை நடத்த முடியும். இதுகூட தெரியாத சிறுபிள்ளையாக இருக்கிறாரே இந்தப் பழ.கருப்பையா. ஏன், கடந்த முறை இவர் தேர்தலில் நின்று வெற்றிபெறுவதற்காக செலவிடப்பட்ட கோடிகளில், இப்படி கண்ணியமாக சேர்க்கப்பட்ட பணமும் உண்டு என்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது? இப்படிப்பட்ட கருப்பையாவை, வெளுக்காமல் விட முடியுமா?

கப்சிப் கட்டுப்பாடு!
"நான் எம்.எல்.ஏ. பதவிக்கு வர அம்மாதான் காரணம். அவரும், அ.தி.மு.க. தொண்டர்களும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால் எம்.எல்.ஏ-வாக எதையும் சாதிக்க முடியவில்லை"
அடஅட என்ன ஒரு கட்டுப்பாடு மீறல். ஒரு கட்சியில் தலைவர் நினைத்தால்தான் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று யாருமே வாய் திறக்க முடியும், குறிப்பாக அ.தி.மு.க-வில்.
இத்தகைய கட்டுப்பாடுதான் காலகாலமாக அத்தனை அரசியல் கட்சிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை மீறுவதற்கு எத்தனை தைரியம் தேவை. அதை சர்வசாதாரணமாக... அதுவும் சிரிப்பு நடிகர் துக்ளக் சோ கூட்டிய ஒரு நிகழ்ச்சியின் மேடையில் நின்று கொண்டு மீறுவது...? இந்தக் குற்றத்துக்கு தூக்கு தண்டனையே கூட கொடுக்கலாம். ஆனால், இப்போதும்கூட தான் அம்மாவின் அடிப்பொடியாக, வாய்ப்புக் கிடைத்தால், தடலாடியாக காலில் விழுந்து மறுபடியும் துறைமுகமோ அல்லது அதற்கு பக்கத்தில் இருக்கும் வங்காள விரிகுடாவில் ஏதாவது ஓரிடமோ கிடைத்து, அதில் படகில் பயணித்தபடியே கூட அடுத்த சட்ட மன்றத்துக்கு பயணிக்க தயாராகத்தான் இருக்கிறார் பழ.கருப்பையா.
ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் நீக்கிவிட்டார்களோ... என்றுதான் கடைசி கடைசியாக ஒரு சந்தேகம் எட்டிப்பார்க்கிறது.

பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?
பழ.கருப்பையாவுக்கு கடைசியாக ஒரு சில கேள்விகள்.
ஐயா, காங்கிரஸில் பலகாலம் வண்டியோட்டிக் கொண்டிருந்து, ஒரு கட்டத்தில் அம்மாவின் கடைக்கண் பார்வையால் கழகத்துக்குள் தங்கத் தேர் ஓட்டி வந்த பழுத்த கருப்பையாவே... உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால்... காலகாலமாக நீங்கள் கட்டிக் கொண்டிருப்பது வெள்ளை வேட்டிதான் என்பது உண்மையாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உண்மையிலேயே இன்றைய அரசியல் பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியாதா?


91-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பிறகு வெளியில் வந்து என்று நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா மற்றும் அவருடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பற்றியெல்லாம் உங்களுக்கு 2011-ம் ஆண்டில் இந்தக் கட்சியில் சேரும்போது தெரியவே தெரியாதா?!

இப்படி முழுப்பூசணிக்காயை ஒரு கைப்பிடி சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்களே! நீங்கள் பேசுவதையும் பேட்டிகள் கொடுப்பதையும் படித்தால், கேட்டால்... 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்திருந்தால் எம்.எல்.ஏ-வான முதல் ஆண்டிலேயே அத்தனை உண்மைகளையும் ஊருக்குச் சொல்லிவிட்டு இந்த வெட்கங்கெட்ட அரசியலை விட்டே விலகி ஓடியிருக்க வேண்டும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக அத்தனையும் அனுபவித்துவிட்டு, இப்போது என்னவோ சுத்தம் சுயம்பிரகாசம் போல மேடை கிடைத்ததும் பொங்கித் தீர்க்க ஆரம்பித்துவிட்டீர்களே!

இப்போது கூட உங்கள் பேச்சில் உண்மையில்லை என்பதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள்...

"இந்த ஆட்சியில் மதுவினால் பெரும் கேடு ஏற்படுகிறது. மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறும் கருத்தை ஏற்க இயலாது. மதுவைத் திறந்த கருணாநிதியே அதை மூடுவதாக அறிவித்துள்ளார்" என்று கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். எந்தக் கருணாநிதியை நார்நாராக கிழித்தீர்களோ... அவருக்கே இப்போது வக்காலத்து வாங்க வேண்டிய காரணம் என்ன?

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாகி அடுத்த ஐந்து ஆண்டு காலத்தை ஓட்டும் திட்டம் ஏதும் உள்ளுக்குள் ஓடுகிறதோ!
அடுத்து, துக்ளக் மேடையில் 'மானமுள்ள ஒரே மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்' என்று போகிற போக்கில் பி.ஜே.பி-யின் மத்திய இணை மந்திரியை புகழ்ந்து தள்ளி, துக்ளக் கூட்டத்தின் கைதட்டல்களை அள்ளியிருக்கிறீர்கள்.

இது எதற்காக? அடுத்ததாக தாமரைத் தடாகத்தில் மூழ்கி முத்தெடுக்கத்தானோ?

ad

ad