சனி, ஜனவரி 02, 2016

ஏ.பி.பரதன் காலமானார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92. 

முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார்.

பரதனின் மனைவி, நாக்பூர் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். இவர் கடந்த 1986ம் ஆண்டு காலமானார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியலில் முன்னணி யில் திகழ்ந்த பரதன், 1957-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவைக்கு சுயேச்சை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் பின்னர் ஏஐடியூசி தலைவராகவும் உயர்ந்தார்.

1990-களில் டெல்லி அரசியலுக்கு திரும்பிய பரதன், கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார். 1996-ல் இந்திரஜித் குப்தாவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.