புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

சென்னை சர்வதேச பட விழா நிறைவு: சிறந்த படம் "கிருமி'; சிறந்த நடிகை நயன்தாரா


சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக "கிருமி' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை
நடிகை நயன்தாரா பெற்றார்.
 உலக சினிமாக்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, தமிழில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 12
 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழா, 13-ஆம் ஆண்டாக கடந்த 6-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த இந்த விழா புதன்கிழமை நிறைவடைந்தது. 
 சர்வதேசப் படங்களின் அணிவகுப்பு: தமிழக அரசின் துணையோடு இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் ஏற்பாடு செய்த இந்த விழாவின் சிறப்பு அம்சமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 180-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 
 ஈரான், கொரியா, ஆஸ்திரியா, துருக்கி, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், நேபாளம், நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச படங்கள் இதில் இடம்பிடித்தன. தமிழ் சினிமாவுக்கான போட்டிப் பிரிவில் கடந்த ஆண்டு வெளிவந்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த "36 வயதினிலே', "மாயா', "தனி ஒருவன்' உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட்டன.
 இந்தியன் பனோரமா பிரிவில் 10 படங்களும், இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகியோரை நினைவுகூரும் வகையில் அவர்களின் பங்களிப்பு சார்ந்த 7 படங்களும் திரையிடப்பட்டன. புகழ் பெற்ற ஜெர்மனி நாட்டின் திரைப்பட இயக்குநர் ஃபாஸ் பைன்டரின் நினைவாக அவர் இயக்கிய 6 படங்கள் திரையிடப்பட்டன. உலக படங்களின் வரிசையில் ஆஸ்கர் விருது மேடையை அலங்கரித்த பல படங்களும் இடம் பெற்று ரசிகர்களின் கவனம் பெற்றன. 
 நயன்தாரா, அரவிந்த்சாமிக்கு விருது: திரையிடப்பட்ட படங்களில் குறிப்பிடத்தகுந்த படங்களுக்கு புதன்கிழமை சென்னையில் நடந்த நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
 குறும்படப் பிரிவில் சிறந்த படமாக "புர்ரா' தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் நடுவர்களின் சிறந்த விருதை "ரேடியோ பெட்டி' படம் பெற்றது. திரைப்பட விழாவின் சிறந்த இரண்டாவது படமாகவும் அப்படம் தேர்வானது. திரைப்பட விழாவின் சிறந்த படத்துக்கான விருதை "கிருமி' படம் தட்டிச் சென்றது. 
 சிறந்த நடிகைக்கான விருதை "தனி ஒருவன்', "மாயா' ஆகிய படங்களில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமிக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் வழங்கப்படும் விருதையும் நடிகை நயன்தாரா பெற்றார். நிறைவு விழாவில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநர் தங்கராஜ், நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், உமா பத்மநாபன், நடிகர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad