புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்டைய சந்தேகநபர்களில் ஒருவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீதான விளக்கமறியல் உத்தரவும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மீராலெப்பை கலீல் ஆகியோரே நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.

எதிர்வரும் 26ஆம் திகதி கூடவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி கோரி அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதோடு, அவரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதற்கான உத்தரவையும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்தப் படுகொலை சம்பவம் நடந்தது.

மேலும் இந்தப் படுகொலை தொடர்பில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது



ad

ad