புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2016

சென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை!


தமிழீழம் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது 9) சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான
நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் கடந்த 10ஆம் திகதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றுள்ளது. பத்து வயதிற்குட்பட்ட தனிநபர் பிரிவில் பங்கேற்ற தனுஜா 50 மீட்டர் Butter Fly நீச்சல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு வினாடியில் தங்கப்பதக்க வாய்ப்பினை இழந்த தனுஜா 39 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய தேசிய அளவிலான போட்டிக்கு முன்னோடியாக நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தனுஜா பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெரிவாகியுள்ளவர்களுக்கிடையே தென் மண்டல (South Zone) அளவில் நடைபெறும் இத் தகுதிச் சுற்றுப் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
ஏதிலிகளாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தனது நீச்சல் திறனால் இன்று தமிழீழ மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் தனுஜா. இதற்கு முன்னர் மாவட்ட, மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்று பதக்கங்களையும் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனுஜாவின் இச்சாதனையானது அவரும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது உலகெங்கும் பரவிவாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது. தொன் மண்டலப் போட்டியிலும் வாகைசூடி தேசிய அளவிலான போட்டியில் தடம்பதித்து எங்கள் தேசத்தின் பெருமையினை உலகறியச் செய்ய வாழ்த்துவோம்.

ad

ad