புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2016

தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் : 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது



 அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அரசு ஊழியர்கள்,  பள்ளி ஆசிரியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர். 

நேற்று 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் தேர்தல் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011 மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள போதிலும் ஒருமுறை கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என எந்த சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு  உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை முதல் முழு வீச்சில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளும்:  சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்களும் நேற்று முதல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 534  கூட்டுறவு வங்கிகள் மற்றும் 23 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணிபுரியும்  ஊழியர்கள் சுமார் 45 ஆயிரம் பேரும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 15 ஆயிரம் பேரும் என 60 ஆயிரம் பேர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து போராடும் 68 சங்கங்கள் சார்பில் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பமானது. நேற்று அரசு ஊழியர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் அரசின் முக்கியத்துறையான வருவாய்த்துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். வருவாய்துறையில் விஏஓ முதல் துணை ஆட்சியர் வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்றைய போராட்டத்தில் இளநிலை உதவியாளர்கள், விஏஓக்கள், ஆர்.ஐக்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ் வழங்குதல், நில நிர்வாகம், நில வருவாய் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்தன.

இதேபோல் வணிகவரித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை என அரசின் முக்கியத்துறைகளில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும் 40 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் போராட்ட  அறிவிப்பை வெளியிட்டு வருவதால் முடிவெடுக்க முடியாமல் அரசு திணறிக்ெகாண்டிருக்கிறது. சென்னையில் எழிலகம் வளாகத்துக்குள் அரசு ஊழியர்கள் திரண்டு வந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் அப்பர் தலைமை வகித்தார். ஊர்வலமாக சென்ற ஊழியர்கள், பொதுப்பணித்துறை அலுவலக வாயில் வழியாக வெளியில் வந்து மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் அப்பர் கூறியதாவது, ‘புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அதிமுக ஓட்டு போட்டது. அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டும், புதிய பென்சன் திட்டத்தையும், பழைய பென்சன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் 1.4.2003க்கு பிறகு அரசு துறைகளில் நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. எங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும். பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளதால், இந்த போராட்டம் பல கட்டங்களை எட்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad