புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் அறிவிக்கப்படக்கூடாது என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது. 'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர். தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற  உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது
. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்காக,  தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு,  கெயில் நிறுவனத்துக்கு 2013 ஏப்ரல் மாதம் உத்தரவு ஒன்றை அனுப்பியது.
அதில், ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலையோரமாக குழாய்களை பதித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அப்போது கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று,  இயற்கை எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  2014 ஜனவரி மாதம் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில்,  இன்று இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.
அப்போது திட்டம் வரையறுக்கபட்டபோது தமிழக அரசு மவுனம் காத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்,  இத்திட்டத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை என காட்டமாக தெரிவித்தது.
மேலும் அரசியல் காரணங்களுக்காக,  வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா எனவும்  கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டில் இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த  உத்தரவால்,  தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் அமல்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. இது கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட உள்ள மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ad

ad