டுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர
முடியாது என்றே தாம் குறிப்பிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதுபற்றிக் கூறுகையில்,
“தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஐ.நாவினால் கோர முடியாது என்றே தான்  குறிப்பிட்டதாகவும், நம்பகமான, நியாயமான, விரைவான விசாரணைகளின் மூலம் அவர்களுக்கு நீதியை வழங்குமாறு கோர முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
செயிட் ராட் அல் ஹுசேனின் இந்த விளக்கம் திருப்தியளிக்கிறது.
தடுப்புக்காவலில் உள்ள கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கவில்லை. ஏனென்றால், அது எதிர்கால போர்க்குற்ற தீர்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாங்கள் தமிழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்புக் கோரினால், போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும் அந்தச் சலுகையைக் கோருவார்கள்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறே நாங்கள் கோருகிறோம்.
தாமும் இணை அனுசரணை வழங்கிய ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடப்பாடு.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக அனைத்துலக தரம்வாய்ந்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுக்க முடியும்.” என்று தெரிவித்தார்.
அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பாக, செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,
“இந்த விடயத்தில் ஊடகங்கள் என்னைத் தவறாக புரிந்து கொண்டுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஐ.நா தலையிட முடியாது என்றும், அத்தகைய தலையீடு உலகளவில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நான் கூறியதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
அனைத்துலக நடைமுறைகளின் படி, தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஐ.நாவினால் கோர முடியாது.” என்று பதிலளித்தார்.