புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார்.

குறித்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் எவையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த பிரேரணையினை முன்மொழிந்து ரவிகரன் சபையில் உரையாற்றுகையில்,
போர் நிறைவடைந்தும் ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கேப்பாப்பிலவு மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.

பொன்விளையும் பூமி என்பார்களே அதே போன்று அந்த மண்ணில் அம்மக்கள் பூரிப்பாக வாழ்ந்த காலங்களை எண்ணிப்பார்க்கின்றேன். தங்கள் தமது மண்ணில் மீள்குடியேறும் படி வேண்டி நிற்கின்றார்கள். 

சனநாயக நாடு தானே என்று எண்ணி அறவழிப் போராட்டங்கள் பல நடாத்திவிட்டார்கள். முன்னைய அரசும் கண்டு கொள்ளவில்லை.

தற்போதைய நல்லாட்சி என்று சொல்லப்படும் ஆட்சியிலும் கண்டு கொள்ளவில்லை. அந்த மக்கள் கலங்குகின்றார்கள். குடியேற்றம் மட்டுமல்ல பிரதான பாதையை மூடி வைத்துள்ளார்கள்.

அடர்ந்த காட்டில் வழியே பாதுகாப்பற்ற இடத்தில் பாதை அமைத்து நாளாந்தம் பயணிக்கும் மக்கள் பயந்த நிலையில் பயணிக்கின்றார்கள்.

தனியாக பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றார்கள். துணையுடன் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. பாதையை திறந்து நல்லெண்ணத்தை காட்டி குடியிருப்பு காணிகளையும் விடுத்து அந்த மக்களை சொந்த இடத்தில் மீள்குடியேற்ற வேண்டும்.

கடந்த வாரம் அந்த மக்கள் என்னை அழைத்து தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதே இறுதி முயற்சி படிப்படியாக தங்களை மாய்த்து கொள்வதே இறுதி முடிவு என்றார்கள்.

அவர்கள் மண்பற்றுதனை பாராட்டி அவசர முடிவு எடுக்க வேண்டாம். உங்களுடைய நியாயமான இக்கோரிக்கைகளை வடக்கு மாகாண சபை அமர்வில் கொண்டு வருகின்றேன் என ஆறுதல் கூறினேன்.

மாற்று இடத்தில் தற்காலிகமாக குடியிருத்தி விட்டு அந்த மக்களை இன்றுவரை ஏமாற்றி கொண்டு இருக்கின்றார்கள். அந்த மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும் என சபையில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் எவையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது.

ad

ad