புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2016

வடமாகாண சபையில் பல்வேறு துறைகள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தினால் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விசேட தேவை உடையோருக்கு மாதந்த உதவித்தொகை வவுனியா மாவட்டத்திலுள்ள பயனாளிகளுக்கும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் எனக்கோரி வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா இந்த தீர்மானதை்தை நிறைவேற்றினார். நேற்று முன்தினம் நடைபெற்ற வடமாகாணசபையின் 45ம் அமர்விலேயே மேற்படி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
மேற்படி அமர்வில் இவ்விடயம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன் மொழிந்து மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா உரையாற்றுகையில்,
மத்திய சமூகசேவைகள் தி ணைக்களம் ஊடாக வடமாகாணத்தில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த, மற்றய மாவட்டங்களில் உள்ள சிறுநீரக பாதிப்பிற்குள்ளானவர்கள் மற்றும் விசேட தேவை உடையே நபருக்கு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் உதவி தொகை வழங்கப்படுகின்றது. எனினும் வவுனியா மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இந்த புறக்கணிப்பு எதற்காக என்பதும் எமக்கு தெரியவில்லை.
குறிப்பாக, சிறுநீரக பாதிப்பிற்குள்ளான 1580 பேர் மேற்படி உதவி தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில் 312 பேருக்கு மட்டுமே அந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் விசேட தேவை உடையோரில் சிலருக்கு மட்டுமே அந்த உதவித்தொகை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கும் 2015ம் ஆண்டு 7ம் மாதம் தொடக்கம் 12ம் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இந்த பாராமுகம் அல்லது புறக்கணிப்பு எதற்காக என்பது எமக்கு புரியவில்லை.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக மத்திய சமூகசேவைகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான கோரிக்கையினை வடமாகாணசபை விடுக்கவேண்டும். எனக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மேற்படி பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், விடயம் மத்திய சமூக சேவைகள் திணைக்களத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படும். என அவைத்தலைவர் சீ.வி.கே.சி வஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு தொழிநுட்ப பீடங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! து.ரவிகரன்
வடமாகாண பாடசாலைகளில் தொழிநுட்ப பாடத்திறனை விருத்தி செய்யும் வகையில் 5 தொழிநுட்ப பீடங்கள் வடமாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றை வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் தலா 1 என்ற வகையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
மாகாணசபையின் 45ம் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையிலேயே மேற்படி தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையினை சபையில் முன்மொழிந்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் 19 பாடசாலைகளில் தொழிநுட்ப பீடங்கள் முன்னதாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை முழுவதும் 50 தொழிநுட்ப பீடங்களை இலங்கை முழுவதிலும் 2ம் கட்டமாக அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம் வடமாகாணத்திற்கு 5 அல்லது 6 தொழிநுட்ப பீடங்கள் கிடைக்கப்பெறும் சாத்தியங்கள் இருக்கின்றன. இந்நிலையில் வடமாகாணகல்வி அமைச்சினால் உத்தேசமாக மேற்படி 2ம் கட்ட தொழநுட்ப பீடங்களை பெறுவதற்கான 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை. என அறிய முடிகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் வட மாகாணத்திற்கு 5 தொழிநுட்ப பீடங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அந்த 5 பீடங்களையும் வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் தலா 1 என்ற வீதத்தில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். மேலும் 1ம் கட்டத்தில் தொழநுட்ப பீடங்களை பெற்றுக் கொண்ட பாடசாலைகள் முல்லைத்தீவில் 2 பாடசாலைகள் மட்டுமே. எனவே இந்த விடயத்தில் மாகாண கல்வியமைச்சு முல்லைத்தீவு மாவட்டத்தை புறக்கணிக்காமல் கிடைக்கும் 5 தொழிநுட்ப பீடங்களை மாவட்டங்களுக்கு ஒன்று என்ற ரீதியில் பகிர்ந்தளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இந்த பிரேரணை சபையில் எவ்விதமான எதிர்ப்புக்களும் இல்லாமல் நிறைவேறியது.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாத உள்ளுராட்சி வீதிகள் அபிவிருத்தி செய்ய வேண்டும்! ஜீ.ரி.லிங்கநாதன்
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான பெருமளவு வீதிகள் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் உள்ள நிலையில் உள்ளுராட்சிமன்றங்களின் நிலையான வைப்புக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பணத்தை உள்ளுராட்சி வீதிகளை புனரமைக்க பயன்படுத்துமாறு மாகாணசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபையின் 45ம் அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தது. குறித்த அமர்பிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமர்வில் வுவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் வவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் பெருமளவு வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் உள்ளது. இவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றை சபைக்கு முன்வைத்திருந்தார்.
குறித்த பிரேரணை தொடர்பான விவாதத்தின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது விடயமாக உறுப்பினர்கள் உரையாற்றுகையில், வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்லாமல் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் பெருமளவான உள்ளுராட்சிமன்ற வீதிகள் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது என சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பாக பிரதி அவை தலைவர் அன்டனி ஜெயநாதன் உரையாற்றுகையில், பிரதேச சபைகளின் நிலையான வைப்புக் கணக்கில் கோடிக்கணக்கான நிதி இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நிதியை பெற்று அதனை உள்ளுராட்சிமன்ற வீதிகளின் புனரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான பிரதேச சபைகளில் இவ்வாறு கோடிக்கணக்கான நிதி அந்த சபைகளின் நிலையான வைப்பு கணக்கில் வைக்கப்பட்டிருக்கின்றது. பெருமளவு நிதியை நிலையான வைப்புக் கணக்கில் வைத்து பேணுவதற்காக பிரதேச சபைகள் இல்லை. எனவே எந்தெந்த பிரதேச சபைகளில் எவ்வளவு நிதி நிலையான வைப்பு கணக்கில் இருக்கின்றது என்பதை உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் நிதியை முல்லைத்தீவில் ஒரு சபை வாகனம் வாங்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தபோது அதனை நானே சென்று தடுத்திருந்தேன். எனவே இவ்வாறான நிதியை மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். மக்கள் வீதியில் பயணிக்க முடியாமல் சேற்றில் நின்று கொண்டிருக்கும் போது நிலையான வைப்பில் கோடிக்கணக்கான பணத்தை முடக்கி வைத்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் முன்மொழிந்த பிரேரணை வடமாகாணத்திலுள்ள உள்ளுராட்சிமன்ற வீதிகளின் புனரமைப்பு என மாற்றம் செய்யப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

ad

ad