புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்


பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் அரசை தடுக்கும் சக்தி எது என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பேரறிவாளனின் தந்தையும் தமிழாசிரியருமான குயில்தாசன் உடலநலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 25 ஆண்டுகளாக மகனைப் பிரிந்து வாடும் அவர் சிகிச்சை பெற மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடுமையான உடல் நலக் குறைவால்  பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருப்பதாகவும், ஆனால், பேரறிவாளன் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து தந்தையின் சிகிச்சையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,  வேலூர் சிறைக்கு புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பின் ஒரு வாரத்திற்கு முன்புதான் அம்மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு பெற அனைத்து தகுதிகளும் இருந்தும், ஒரு உன்னத நோக்கத்திற்காக அதை வழங்குவதற்கு, தமிழக அரசு தயங்குவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் சிறிதும் தொடர்பற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் வாழ்நாள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. வழக்கமாக வாழ்நாள் சிறை தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படும் நிலையில் 25 ஆண்டுகளாகியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறைக் கொட்டடியிலிருந்து விடுதலையாக முடியவில்லை.
மும்பை தொடர்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாற்றப்பட்டு ஆயுத வழக்கில் தண்டிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனைக் காலம் நவம்பர் மாதம் முடிவடையவிருக்கும் நிலையில், இந்த மாதமே விடுதலை செய்யப்படவிருக்கிறார்.
இத்தனைக்கும்  தண்டனை காலத்தில் 146 நாட்களை சிறை விடுப்பில் வெளியில் கழித்திருக்கிறார்.  ஆனால், 25 ஆண்டு கால சிறை வாசத்தில் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் செல்லாத பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இந்த பாகுபாட்டையெல்லாம்  பார்க்கும் போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாக தோன்றுகிறது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாழ்நாள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  இவர்கள் மூவரையும், ஏற்கனவே தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட நளினி உள்ளிட்ட நால்வர் என 7 பேரை   விடுதலை செய்ய ஜெயலலிதா ஆணையிட்டார்.
ஆனால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் வலியுறுத்தினேன்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால், அந்தக் கோரிக்கை குறித்து தமிழக அரசு இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க 2014 ஆம் ஆண்டில் என்னென்ன நியாயங்கள் இருந்தனவோ, அதே நியாயங்கள் இப்போதும்  உள்ளன. ஆனால், சாதகமாக முடிவு எடுக்க தமிழக அரசை எந்த சக்தி தடுக்கிறது என்பது தெரியவில்லை.
பேரறிவாளனின் கடந்த கால செயல்பாடுகளையும், அவருக்கு இப்போதுள்ள கடமையையும் கருத்தில் கொண்டு அவர் உள்ளிட்ட 7 தமிழர்களையும் அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவுப்படி விடுதலை செய்ய வேண்டும்.
அதற்கான நடைமுறைகளை முடிக்க காலம் தேவைப்படும் என்றால் இடைக்கால ஏற்பாடாக பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  கூறியுள்ளார்.


ad

ad