புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

கேப்டன் 25 லட்சம்... திருமா பத்து லட்சம்! -களைகட்டும் தேர்தல்வசூல்!

'அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராக படையணியைக் கட்டியமைத்தது இருக்கட்டும். 'தேர்தல் செலவுக்கு பாண்டவர்கள் என்ன செய்யப்
போகிறார்கள்?'-என்ற கேள்வி மநகூ - விஜயகாந்த் கூட்டணிக்குள் பிரதானமாக எழுகிறது. அதற்கேற்ற வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிதி ஆதாரத்தைத் திரட்டுகிறார்கள் தலைவர்கள்.
இக்கூட்டணியில் 124 இடங்களில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். வைகோ, திருமா, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் மீதமுள்ள 110 இடங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். தி.மு.கவும், ஆளும் அ.தி.மு.கவும் பணபலத்தில் களத்தில் வலுவாக உள்ளனர். இவர்களைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்றால், ' பூத் வாரியாக கரன்சியை கணிசமாகக் கரைத்தால் மட்டுமே, அடிமட்டத் தொண்டர்கள் வேலை பார்ப்பார்கள்' என இவர்களுக்குத் தெரியும்.
இதற்காக, என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன? என்ற  கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் கேட்டேன்.
" நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரையில், எங்கள் கட்சி வலுவாக இல்லை. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர்தான். அதனால், தேர்தல் கமிஷன் வரையறுத்துள்ள தொகைக்குள் செலவு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இதற்காக சீட் கேட்கும் நிர்வாகியிடம், தலா பத்து லட்ச ரூபாயும், கட்சி வளர்ச்சி நிதியாக 2 லட்ச ரூபாயும் வசூல் செய்ய கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அப்போதுதான் போதுமான அளவுக்கு தேர்தல் செலவை ஈடுகட்ட முடியும்" என்கிறார்.
வி.சி.க இப்போதுதான் தேர்தல் நிதி வசூலைத் தொடங்கியிருக்கிறது. ஆனால், தே.மு.தி.க  தரப்பிலோ, 'வேட்பாளர் நேர்காணல் நடந்தபோதே கறார் வசூலை முடித்துவிட்டார் விஜயகாந்த்' என்கிறார்கள். 234 தொகுதிகளிலும் போட்டியிட தேர்வான வேட்பாளர்களிடம் தலா 25 லட்ச ரூபாய் என டெபாசிட் தொகையை வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இதனால், தே.மு.தி.க கஜானா போதுமான வலிமையோடு இருக்கிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு போட்டியிட இருக்கும் 124 தொகுதிகள் எவை எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. முடிவான பின்னர்  மீதமுள்ள தொகுதிகளுக்கு கட்டிய டெபாசிட் பணத்தை வாங்க முடியுமா என  பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள். 'அந்தப் பணத்தையும் கட்சி வளர்ச்சி நிதி என கேப்டன் கணக்கில் எடுத்துக் கொள்வாரோ?' என அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.
ம.தி.மு.கவோ, ' மக்கள் நலக் கூட்டணிக்கு என உதவி செய்ய பல தொழிலதிபர்கள் முன் வருவார்கள். அவர்கள் அளிக்கும் நிதி மற்றும் தொகுதிக்குள் செலவு செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களையும் வேட்பாளராக நிறுத்தலாம்' என கணக்குப் போடுகிறது. 

ஆனால், தேர்தல் செலவை இடதுசாரிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றிப் பேசும் சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், " தொகுதிக்கு 28 லட்ச ரூபாய் வரை செலவழிக்கலாம் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. நாங்கள் அந்தளவுக்கு செலவு செய்யப் போவதில்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்டு 11 எம்.எல்.ஏக்களை வென்றோம். இப்போது கூடுதலாக, பதினைந்து தொகுதிகளில் நாங்கள் போட்டியிடலாம். எப்போதுமே 20 தொகுதிகளைக் கணக்கிட்டுப் போட்டியிடுவதே எங்கள் வழக்கம். மற்ற கட்சிகளைப் போல, சாப்பாடு வாங்கிக் கொடுப்பது, வாகன வசதி செய்து கொடுப்பது போன்ற வழக்கம் எல்லாம் எங்கள் கட்சியிடம் இல்லை. பிரசாரத்திற்கு வருபவர்கள், அவர்களுக்குத்  தேவையான சாப்பாட்டை வீட்டில் இருந்தே கொண்டு வருமாறு சொல்லிவிடுவோம். இதர செலவுகளுக்கு மக்களிடம் கையேந்துவோம். அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள்தான் எங்களுக்கு ஆதாரம். தவிர, இப்போது போஸ்டர், சுவர் விளம்பரம் என எதுவும் கிடையாது. சமூக வலைத்தள பிரசாரம் என போட்டிக் களம் செலவைக் குறைக்கும் வகையிலேயே உள்ளது. தேர்தல் நாளன்றுதான் அதிக செலவு பிடிக்கும். அதற்கேற்ற வகையில் தயாராவது பற்றி விவாதித்து வருகிறோம்" என்கிறார். 

யானை வாங்கினாலும், சங்கிலி வாங்குவதற்கு காசில்லாத நிலை வந்துவிடக் கூடாது என்ற பதற்றம் மக்கள் நலக் கூட்டணியில் தெளிவாகவே தெரிகிறது.

ad

ad