புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2016

ஜெ.,வழக்கில் கடனையும், பரிசுப்பொருட்களையும் வருமானமாக கருதியது தவறு கர்நாடக அரசு வக்கீல் ஆச்சாரியா வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

இறுதி விசாரணை பிப்ரவரி 23–ந் தேதியன்று தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறைவு செய்தார்.

6–வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை மீண்டும் தொடர்ந்தார்.

விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து பல்வேறு கட்டங்களில் பெற்ற கடன் தொகைகள், அவற்றை திருப்பிக் கட்டிய விபரங்கள், நிலுவைத் தொகை ஆகியவை அடங்கிய 10 பக்க பட்டியலையும், ஜெயலலிதா வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்கள் குறித்த 10 பக்க அட்டவணையையும் ஆச்சாரியா கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

பிறகு, அந்த பட்டியலில் உள்ள விபரங்களை விரிவாக வாசித்து தனது வாதத்தை தொடங்கினார். அவர் கூறியதாவது:–  பல்வேறு வங்கிகளிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்ற தொகை 18 கோடி ரூபாயை ஐகோர்ட்டு அவர்களது வருமானமாக கணக்கு காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

தனிக்கோர்ட் இந்த கடனை வருமானமாக கணக்கிட முடியாது என்று கூறியும் அந்த கடன்களை மொத்தமாக 24 கோடியாக கணக்கிட்டதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்?

இந்த வங்கி கடன்களை பெற்றது குறித்து விளக்கம் அளிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் அதனை சரிவர நிரூபிக்க முடியவில்லை.

1992 பிப்ரவரி 24–ந் தேதியன்று ஜெயலலிதாவின் 44–வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் காசோலைகள் மூலம் அவருக்கு 2 கோடியே 15 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாக அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டோ இந்த பரிசுப் பொருட்களின் மதிப்பை வெறும் 1 கோடியே 50 லட்ச ரூபாயாக கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய முரணாக உள்ளது.

பரிசுப் பொருட்களை சட்டரீதியான வருமானக் கணக்கில் சேர்க்க முடியாது என்று கீழ்கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. பரிசுப் பொருட்களை வருமானமாக கணக்கு காட்ட முடியாது. மேலும் முதல்வர் போன்ற பொதுப்பணியில் இருக்கும் ஒருவர் தனக்கு அளிக்கப்படும் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. ஜெயலலிதா அவ்வாறு செய்யவில்லை. இது விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடாகும்.  மேலும், தனிக்கோர்ட்டில் 1998–ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் வருமான வரி கணக்கில் பரிசுப் பொருட்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான பரிசுப் பொருட்கள் மீதான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இவ்வாறு கூறிய பி.வி.ஆச்சாரியா, முதல்வர் உள்ளிட்ட பொது பதவிகளில் உள்ளவர்கள் தொடர்பான பரிசு பொருட்கள் குறித்த தமிழக அரசு விதிமுறைகள் குறித்து பேச முற்பட்டபோது, ஜெயலலிதா தரப்பு வக்கீல் நாகேஸ்வரராவ், ‘இதுபோன்ற விதிமுறை தமிழ்நாட்டில் இல்லை. மேலும், இந்த வாதத்தை புதிதாக சேர்க்க அனுமதிக்கக்கூடாது’ என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜிஆர் நாளேடு குறித்து ஆச்சாரியா வாதிடத் தொடங்கினார். அவர் கூறியதாவது:–  இந்த நிறுவனங்கள் மூலம் பெற்றதாக கூறப்படும் வருமானம் ரூ.14 கோடி, முறைகேடான வருமானமாகும். காரணம் வருமான வரி தாக்கல் செய்தபோது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் கிடைத்ததாக 1 கோடியே 15 லட்சம் ரூபாயை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஐகோர்ட்டு நீதிபதி அதனை 3.85 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து ரூ.4 கோடியாக மதிப்பிட்டுள்ளார். இது தவறான மதிப்பீடாகும்.

அதேபோல் 10 கோடி ரூபாய் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டின் மூலமாக சந்தா தொகையாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதனை கர்நாடக ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டது.  ஆனால் சந்தா செலுத்தும் திட்டமே வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் தான் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சந்தா தொகை கட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொலைந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த ரசீதுகளும், அவை வைக்கப்பட்டிருந்த காருடன் தொலைந்து போனதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவை மீண்டும் கிடைத்துவிட்டதாக கூறி சில ஆவணங்களை கொடுத்தனர். ஆனால் அவற்றை தனிக்கோர்ட்டு ஏற்கவில்லை. எனவே, இந்த தொகைகளும் தவறான வகையில் வருமானமாக சேர்த்தது என்பதால் அவற்றை கணக்கில் சேர்க்கக் கூடாது.

இவ்வாறு ஆச்சாரியா கூறியபோது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘வருமான வரி தீர்ப்பாயம் இந்த 14 கோடிக்கான கணக்கை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்படி இருக்கும்போது எவ்வாறு உங்கள் வாதங்களை ஏற்றுக்கொள்வது? தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு எதுவும் செய்துள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து விவரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக பி.வி.ஆச்சாரியா கூறினார். இதனையடுத்து வழக்கின் மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் கர்நாடக அரசு தரப்பில் பி.வி.ஆச்சாரியா தனது வாதங்களை தொடருவார்.

ad

ad