புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

பெல்ஜியம் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர்- தாயார் கண்ணீர் பேட்டி

பெல்ஜியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர்
என்ஜினீயர் காணாமல் போய் உள்ளார். குண்டுவெடிப்பு நடத்த வழியில்தான் மகன் தினமும் அலுவலகத்துக்கு செல்வான், அவனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கணேசனின் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், பிரசெல்சில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகவேந்திர கணேசன் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இன்போசிஸ் ஊழியரான கணேசன், மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் கிளையில் 4 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் ஒரு ‘புராஜக்ட்’ பணிக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். கணேசனுடைய மனைவி, சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்ப்பதற்காக, கடந்த மாதம் கணேசன், சென்னைக்கு வந்திருந்தார். அவருடைய தாயார் அன்னபூரணி, மும்பையில் வசித்து வருகிறார். குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தன் தாயாருடன் ‘ஸ்கைப்’ மூலமாக கணேசன் பேசியுள்ளார். தான் பணிக்கு கிளம்பிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, கணேசனுடனான தொடர்புகள் அனைத்தும் தூண்டிக்கப்பட்டன. அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது பெயர், பலியானவர்கள் பட்டியலிலோ, காயம் அடைந்தவர்கள் பட்டியலிலோ இல்லை. அதனால் அவர் எப்படி இருக்கிறார் என்பது மர்மமாக இருக்கிறது. 
பிரசெல்ஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம், கணேசனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு குழுக்களை அனுப்பியது. ஆனால், கணேசன் அங்கும் இல்லை. இன்போசிஸ் நிறுவனம், இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கணேசனுடன் பணியாற்றும் சக ஊழியர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தின் புனே, பெங்களூரு மற்றும் பிரசல்ஸ் கிளைகளின் அதிகாரிகள், கணேசனின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

ராகவேந்திர கணேசனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கணேசனின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணேசன் மாயமானது குறித்து அவருடைய தாயார் அன்னபூரணி கூறுகையில், "குண்டு வெடிப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, அதாவது இந்திய நேரப்படி பகல் 1.11 மணிக்கு என்னுடன் ‘ஸ்கைப்’ மூலமாக என் மகன் பேசினான். 10 நிமிடங்கள் பேசினான். அப்போது, பணிக்கு கிளம்பிக்கொண்டிருப்பதாக கூறினான். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஜெர்மனியில் வசிக்கும் என்னுடைய மற்றொரு மகனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பிரசெல்சில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக அவன் கூறினான். நான் உடனே, டி.வி.யில் செய்தி பார்த்தேன். விமான நிலையத்தில் குண்டு வெடித்ததை மட்டுமே முதலில் காட்டினார்கள். பிறகு, மெரோடுக்கும், பார்க் ஸ்டேஷனுக்கும் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது. அந்த வழியில்தான் அவன் தினமும் அலுவலகத்துக்கு செல்வான். 

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டனர். என் மகன் பெயர், பலியானவர்கள் பட்டியலிலோ, காயம் அடைந்தவர்கள் பட்டியலிலோ இல்லை என்று அவர்கள் கூறினார்கள். 
லேசான காயத்துடன் தப்பிய சிலர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றதாக அவர்கள் கூறினார்கள். அங்கு சிலர் சுயநினைவுடனும், சிலர் மயக்கமாகவும் இருப்பதாக தெரிவித்தார்கள். அவர்கள் என் மகனை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அவனுடைய நண்பர்களும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனிடையே, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, எங்கள் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அறிய ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டோம். கணேசனை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அவரை கண்டுபிடிக்க இந்திய தூதரகம், பிரசெல்ஸ் அதிகாரிகள் ஆகியோரின் உதவியை நாடி உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad