புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணி- தே.மு.தி.க. உடன்பாடு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


மக்கள் நலக்கூட்டணி- தே.மு.தி.க. இணைந்திருப்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் 

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- 

வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து உள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமாகவும், நலனுக்கு எதிராகவும் இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் அமைய போவது இல்லை. 

பவுர்ணமி நாள் என்பது முழுமை பெற்ற நாள் என்பார்கள். தேய்பிறை காலத்தில் அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளனர். வைகோ-விஜயகாந்த் கூட்டணி மக்களுக்கு பயன்தரக்கூடிய கூட்டணி அல்ல. 

விஜயகாந்த் முதல்-அமைச்சர் ஆக வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி பழம் கனிந்து வருகிறது என்றார். பழம் கனிந்து பாழாய் போய்விட்டது. முன்பு ஒற்றை காளை வண்டியாக இருந்தது. இப்போது இரட்டை காளை வண்டியாகி உள்ளது. ஆனால் வண்டியை யார் ஒட்டுவது? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் மக்கள் தான் பெரிய சக்தி. 

சி.ஆர்.சரஸ்வதி

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி:

விஜயகாந்த் இவ்வளவு நாள் கழித்து கூட்டணி குறித்து முடிவு செய்துள்ளார். இது அவர்களின் கட்சி முடிவு என்றாலும், இதில் என்ன வருத்தம் என்றால், இதுவரை மக்கள் நலன், மக்கள் நலன் என்று பெயர் சூட்டி, கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தவர்கள் இன்றைக்கு அதை மறந்து, விஜயகாந்தை சந்தித்து பேசிய பிறகு தங்கள் கூட்டணி பெயரையே மாற்றி விட்டார்கள். 

கூட்டணி பெயரை மட்டும் அவர்கள் மாற்றவில்லை மக்கள் நலன் என்பதையும் மாற்றியிருக்கிறார்கள். இதில் இருந்து அவர்களுக்கு எங்கே மக்கள் நலன் இருக்க போகிறது? தங்கள் நலன் தான் முக்கியம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். 

இன்றைக்கு ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களிடையே போய் சேர்ந்துள்ளது. மக்கள் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைப்பார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஜெயலலிதாவுக்கு மக்கள் அளிப்பார்கள். 

தே.மு.தி.க. நாங்கள் கூட்டணி அமைத்ததை பார்த்து பயந்து தான் சரத்குமாரை அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் இணைத்திருக்கிறார் என்று வைகோ கூறியிருக்கிறார். தேர்தலில் தாங்கள் அமைத்த மக்கள் நலக்கூட்டணி தேறாது என்று நினைத்து தான் அவர்கள் விஜயகாந்திடம் கெஞ்சி கூத்தாடி சேர்ந்து இருக்கிறார்கள். பயம் என்ற வார்த்தையை கேள்விப்படாதவர் எங்கள் அம்மா.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி:

இது சந்தர்ப்பவாத கூட்டணி. தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க. தவிர அனைத்து கட்சிகளுடனும் 3 மாதங்களாக விஜயகாந்த் பேசினார். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள வைகோ, நாங்கள் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்கமாட்டோம். அது ஜனநாயக முறைக்கு எதிரானது. சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு முன்பாக நாங்கள் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்கமாட்டோம் என்று சொன்னார். ஆனால் இன்று அதையெல்லாம் கடந்து விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். 

இந்த அரசியல் சூழல் எங்களுக்கு மிக சாதகமான சூழல். பா.ம.க.வின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. காரணம், தி.மு.க., அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். இந்த 2 கட்சிகளும் வேண்டாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். 

எதிர்க்கட்சி தலைவராக செயல்பட முடியாத விஜயகாந்த், தற்போது முதல்-அமைச்சராக வந்து என்ன முடிவு எடுப்பார். எங்களுடைய ஓராண்டு கால உழைப்பு, அணுகுமுறை, விஞ்ஞான ரீதியிலே அரசியல், தெளிவான சிந்தனைகள், கருத்துகள், வித்தியாசமான மாநாடு என தைரியமாக களத்தில் இருக்கிறோம். கூட்டணி எங்களுக்கு அவசியம் இல்லை. மக்களை நம்பி இருக்கிறோம். தமிழ்நாடு அரசியல் கட்சிகள் எங்களை பின்பற்றி கொண்டு இருக்கிறார்கள். அதிக தன்னம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பெண்களின் ஓட்டு எங்களுக்கு அதிகளவில் பதிவாகும்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:

ஒவ்வொரு கட்சியிலும் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதிலே குறிகோளாக இருக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை அல்ல. இத்தகைய சுயநல காரணங்களுக்காக நல்ல கூட்டணி அமைவது தடுக்கப்பட்டு இருக்கிறது. 

விஜயகாந்த் எடுத்த முடிவு ஒரு தவறான முடிவு. அவர் பா.ஜ.க.வோடு இணைந்திருந்தால் எந்த நோக்கத்திற்காக கடந்த காலங்களில் பேசி வந்தாரோ அது நிறைவேறி இருக்கும். 

அவர் சேர்ந்த ஒரு நிமிடத்தில் அது தகர்த்து எறியப்பட்டு இருக்கிறது. தவறான பாதைக்கு தன் கட்சியை விஜயகாந்த் எடுத்து சென்று இருக்கிறார்.

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் எந்த மதிப்பெண்ணும் இல்லை. அது போன்ற நிலை தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் பா.ஜ.க.வுடன் இணைந்திருந்தால் தமிழகத்தில் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொலைநோக்கு பார்வையுடன் 2 கழகங்கள்(தி.மு.க., அ.தி.மு.க.) இல்லாமல் 19.5 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அதே கூட்டணி தொடர்ந்து ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பினோம். ஆனால், அந்தந்த கட்சிகளின் சுயநல விரும்பத்தால் நிறைவேறாமல் போய்விட்டது. 

விஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணி இணைந்திருப்பது எந்தவிதத்திலும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. பலம் பொருந்திய கட்சியாக நாங்கள் இருக்கிறோம். 

ஜி.கே.வாசன்

த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன்:

தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி அமைக்கும் என்பது இது பரவலாக பேசப்பட்ட ஒரு செய்தி. மக்கள் நலக் கூட்டணி தங்களுக்கு ஏதுவான முடிவை அறிவித்து இருக்கிறார்கள். மேலும், தாங்கள் ஏற்றுக் கொண்ட தலைமையை அவர்கள் அறிவித்து இருப்பது அவர்களது உரிமை. அதை அவர்கள் இன்று உறுதிபட வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

இதில் த.மா.கா.வுக்கு தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. த.மா.கா.வை பொறுத்தமட்டில் கூட்டணி பற்றிய இறுதி முடிவை இந்த மாதம் இறுதிக்குள் அறிவிப்பேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதுவரை எந்தவிதமான யூகங்களுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை. த.மா.கா. எந்த கட்சியோடு சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறது என்பதை பத்திரிகை நண்பர்களை அழைத்து நான் அறிவிப்பேன்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

‘‘தே.மு.தி.க. தனித்துப்போட்டி என்று அறிவித்துவிட்டு இப்போது இணைந்திருப்பது ஒரு தடுமாற்றமான நிலையையே காட்டுகிறது. அவர்களால் எப்படி ஒரு சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த முடியும். இதனை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை’’.

தமிழருவி மணியன் 

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன்:

விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைப்பாட்டில் நின்றுவிட்ட வைகோ தனக்கான வீழ்ச்சியை தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பது தான் உண்மை. பவுர்ணமி நாளில் மக்கள் நலக் கூட்டணியும், விஜயகாந்தும் ஒன்றாக இணைந்து இருக்கிறார்கள்.

பவுர்ணமிக்கு அடுத்த நாளில் தேய்பிறை தொடங்கி அமாவாசை இருட்டில் முடியும். தமிழக அரசியலில் புதிய வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்ப்பதற்காக புறப்பட்டவர்கள் அமாவாசை இருட்டில் மக்களை ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே இந்த அணி விஜயகாந்த் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கும்.

ஒட்டு மொத்தமாக கூட்டிப் பார்த்தாலும் 12 சதவீதத்துக்கு மேல் எட்ட முடியாத இக்கூட்டணி தேர்தலில் தோல்வியுற்றநிலையில் தேர்தலுக்கு பின்பு திசைக்கொன்றாய் பிரிந்து போகும். இந்த கூட்டணி ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் வீழ்த்துவதற்கு எந்த மேலான லட்சியத்தையும் பலியிடுவதற்கு தயாராகிவிட்டது என்பது தான் பொய்யின் நிழல் படாத நிஜம்.

கே.எம்.காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் நேரடி போட்டி. அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டி போடுகிற சக்தி தி.மு.க.வுக்கு தான் உண்டு. 

அவர்கள் ஜீரோ(மக்கள் நலக்கூட்டணி) பிளஸ் ஜீரோ(தே.மு.தி.க.) ஜீரோ தான்.’ 

ad

ad