புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

வித்தியா குடும்பத்தினருக்கு ஜனாதிபதியால் வீடு கையளிப்பு - இராணுவக் கிராமம், வடக்கு மாகாண சபை எதிர்ப்பு!


சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.
வவுனியாவில் கொக்கெலிய என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்ட கொக்குவெளி என்ற தமிழ் கிராமத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 56ஆவது டிவிசனைச் சேர்ந்த 4ஆவது பொறியியல் படைப்பிரிவினால் 51 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த வீடுகள், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கும், 7 குழந்தைகளைப் பெற்ற சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் வழங்கப்படவுள்ளன.
இவற்றில் ஒரு வீடு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.
தலா 40 பேர்ச் காணியுடன் அமைந்த இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் ரூபா பெறுமதியானவை.
சத்விருகம (நல்லிணக்க கிராமம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் ஏப்ரல் 3ஆம் நாள் கையளிக்கவுள்ளார்.
புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவியின் தாயாரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த சிறிலங்கா அதிபர், வவுனியாவில் வீடு ஒன்றை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படியே, இராணுவக் கிராமத்துக்குள் வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வவுனியாவில் இராணுவக் கிராமம் அமைக்கப்படுவதற்கு, இன்று நடக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ad

ad