புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

'தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'

அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சி
ல இடங்களில் இவரே அடிபடுவார். இருந்தும் மக்களுக்காக பல விஷயங்களில் போராடி வருபவர் ஃட்ராபிக் ராமசாமி. கடந்த வாரங்களில் விஜயகாந்த், பொ.ராதாகிருஷ்ணன் போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து தலைப்பு செய்திகளில் இருந்தவர், திடீரென ஒரு புது பிளானோடு கிளம்பி இருக்கிறார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

தற்போது புதிதாக என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் ?

''தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, இன்னமும் யார் முதல்வர்? என்ன கூட்டணி? எத்தனை சீட்? யார் யாரோடு போவார்கள்? என்கிற கேள்விகள்தான் அரசியல் கட்சிகளின் ‘ஹாட் - டாபிக்’ ஆக இருக்கிறது. யாரும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? வர்களின் தேவை என்ன? என்பது பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள். அதுவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இரு பெரிய கட்சிகளும் மக்களை ஒரு துரும்பு அளவு கூட மதிக்கவில்லை. இன்றைய நிலையில் தேவை ஆட்சிமாற்றம் அல்ல; அரசியல் மாற்றம். அதனால் மக்கள் என் பக்கம் வந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தேர்தலை நிறுத்தப் போகிறேன்.''
ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? எப்படி உங்களால் தேர்தலை நிறுத்த முடியும்?

''இப்போது தமிழ் நாட்டின் அதிகாரம் ஆட்சியாளர்களிடத்தில் இல்லை. இனி தேர்தல் நடந்து, முடிவுகள் வந்த பிறகுதான் புதிய அரசு பதவி ஏற்கும். இன்றைய நிலையில் யார் வந்தாலும் மாறி மாறி இதே ஆட்சிதான், இதே காட்சிதான். 234 தொகுதிகளிலும் நான் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறேன் சுயேட்சையாக. அதுவும் ஒரு வேட்பாளர் இல்லை, தொகுதிக்கு 200 நபர்களை நிறுத்தப் போகிறேன். அப்படி நடந்தால் தேர்தல் ரத்தாகும். அதுதான் எனது முதல் வெற்றி.''

தொகுதிக்கு 200 பேரை எப்படி நிறுத்த முடியும்? அது சாத்தியமா?

''நான் ஏற்கனவே சொன்னது போல மக்கள் மீது யாருக்கும் அக்கறை இல்லை. தொகுதி, சீட், காசு மட்டும் தான் கணக்கு. அதனால் மக்கள் வெறுப்படைந்து என்னிடம் வந்து விட்டார்கள். இன்றைய நிலைக்கு தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் என்னை நம்புகிறார்கள். ஏற்கனவே நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளிடம் மீண்டும் ஏமாற மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் தொகுதிக்கு 200 பேரை நிறுத்தும் எண்ணம் வந்தது. காசு ஒரு குறிக்கோள் இல்லை இந்த ‘ட்ராபிக் ராமசாமிக்கு’. அதனால் இந்த வாரம் வரை டைம் தருகிறேன் இந்த அரசியல்வாதிகளுக்கு. அதற்குள் வேட்பாளர்கள், கூட்டணி, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை நிறுத்தும் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக தொடங்கிவிடுவேன்.''

கடந்த வாரத்தில் தானே கேப்டன், பொன்னார் போன்ற தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசி வந்தீர்கள். அதற்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் ?

''ஆம். விஜயகாந்த், பொ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன். அது ஏன் என்றால், தே.மு.தி.க எக்காரணத்தைக் கொண்டும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விட கூடாது என்பதால்தான். அவர்கள் தான் மொத்த ஊழலின் முகம். அடுத்து, அ.தி.மு.க இவர்களின் அட்டூழியத்தை தனியாக சொல்ல வேண்டியது இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் என்னென்ன பிரச்னை செய்தார்கள், அதற்கு நான் எப்படி போராடினேன் என்று மக்கள் ஊடகங்களில் பார்த்து இருப்பார்கள். இவர்களைத் தாண்டிய இடத்தில் இருப்பது தே.மு.தி.க., பி.ஜே.பி., த.மா.கா மட்டுமே. அதனால் அவர்கள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த வெறுப்புகளை எல்லாம் மீறி ஜெயலலிதா நிற்கும் தொகுதியில் என்னை பொது வேட்பாளராக்க அனைத்து கட்சிகளிடமும் கேட்கலாம் என்று இருந்தேன். காரணம் ஜெயலலிதாவை எதிர்க்கும் தைரியம் கொண்ட ஒரே ஆள் நான் மட்டும்தான் என்பதை இந்த உலகம் அறியும். தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் என்னை வந்து சில நாட்களுக்கு முன் சந்தித்தனர். அதனால், இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்.''

ஒருவேளை நீங்கள் கொடுத்த கெடுவுக்குள் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டால் என்ன செய்வீர்கள்?

''அப்படி அவர்கள் அறிவித்து விட்டால் நல்லதுதான். அடுத்து மக்கள் பிரச்னைகளை பார்க்க கிளம்ப்விடுவான் இந்த இளைஞன் ராமசாமி. அப்படியே அறிவித்தாலும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ, அன்புமணி, தொல்.திருமாவளவன், இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் 200 பேரை நிறுத்துவேன். இதனால், தேர்தல் ஆணையம் சின்னம் கிடைக்காமல் தடுமாறும். வேறு வழியின்றி தேர்தல் நடக்காது. அப்படி நடந்துவிட்டால் இவர்களை சட்டசபைக்கு போகாமல் தடுத்து நிறுத்திய பெருமை என்னையும், என்னை சார்ந்து இருக்கும் மக்களையும் சேரும். ஜனநாயகம் வெற்றி பெறும்.''

ad

ad