புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

ஹசனலி, பஷீர் சேகுதாவூது ஆகியோர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து இடைநிறுத்தம்?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூது ஆகியோர் அக்கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது தேசிய பேராளர் மாநாடு அம்பாறை மாவட்டத்தின் பாலமுனைக் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றும் போது நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த தகவலை சூசகமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த மஹிந்த ஆட்சியில் கட்சிக்கு துரோகம் செய்து ஆட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்க முயன்றவர்கள் இன்றும் கட்சிக்கு எதிராக குழிபறிக்க முனைகின்றனர். அவர்களை இன்று நள்ளிரவுக்குள் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன். முஸ்லிம் காங்கிரஸ் என்பது வெறும் அறிக்கைகளால் மட்டும் நடத்தப்படும் கட்சி அல்ல என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூது குறித்தே அமைச்சர் ஹக்கீம் மேற்குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி நிழலில் இருந்து உருவான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தமிழ் மக்களுக்கு எதிரான கட்சியாக மாற்றியமைத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவே பஷீர் சேகுதாவூது அடையாளப்படுத்தப்படுகின்றார்.
ஈரோஸ் இயக்கத்தினூடாக தமிழ்ச் சமூகம் போட்ட பிச்சையில் 1989ம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு காலடி எடுத்து வைத்த பஷீர் சேகுதாவூது, 1994ம் வரையான தனது நாடாளுமன்றப் பதவிக்காலத்தில் தமிழ் சமூகத்தினரின் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை தானும் உரையாற்றவில்லை. அதற்குப் பதிலாக சிங்கள இனவாதிகளுடன் இணைந்து கொண்டு, தமிழ் சமூகத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவளித்திருந்தார்.
அதன் பின்னர் தனக்கு இரண்டாவது தடவையாகவும் தமிழ் சமூகத்தின் முதுகில் சவாரி செய்து நாடாளுமன்றம் செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பஷீர் சேகுதாவூது, 1994ம் ஆண்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சுமுகமாக இருந்த தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைப்பதில் முன்னின்று செயற்பட்டார்.
அத்துடன் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை முன்னிறுத்தி முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சியை சீர்குலைத்து, அதனை வளரவிடாமல் தடுத்தது மாத்திரமன்றி, அஷ்ரப் இன் மர்ம படுகொலையிலும் பஷீருக்கு தொடர்பிருப்பதாக இன்று வரை முஸ்லிம் சமூகம் குற்றம் சாட்டி வருகின்றது.
அதன் பின்னர் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் வழிநடத்தப்பட்ட முஸ்லிம் காங்கிரசில் வீசிய அனைத்துப் புயல்களின் சூத்திரதாரியாகவும் பஷீர் சேகுதாவூது பின்னின்றுள்ளார். அதாவுல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோரின் விலகல் உள்பட கட்சியின் அனைத்து பிளவுகளுக்கும் கட்சி ஆதரவாளர்கள் பஷீரை நோக்கியே இன்றளவும் கைநீட்டுகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிங்கள இனவாதிகளுக்கு பாடம் கற்பித்த இலங்கைச் சமூகம் பொதுத் தேர்தலின் போது பஷீர் போன்ற சிறுபான்மை இனவாதிகளுக்கும் ஒரு பாடம் கற்பிக்க தயாராக இருந்த நிலையில் அவர் சாமர்த்தியமாக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருந்தார்.
எனினும் அரசியல் அதிகாரம் அற்ற நிலையிலும் இன்றுவரை மட்டக்களப்பு தமிழ்- முஸ்லிம் விரிசலின் சூத்திரதாரிகளில் ஒருவராகவே பஷீர் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூக்கி வீசப்படும் நிலையேற்பட்டால் அரசியல் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் விழுவதைத் தவிர பஷீருக்கு முன்னால் வேறு தெரிவுகள் இல்லை என்றே கூறப்படுகின்றது. ஏனெனில் பெரும்பான்மைக் கட்சியொன்றின் முகவராக மட்டக்களப்பில் களமிறங்கி அரசியல் செல்வாக்கைத் தக்க வைக்கும் அளவுக்கு பஷீர் சேகுதாவூது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு வங்கியையோ, ஆதரவுத் தளத்தையோ கொண்டிருக்கவில்லை என்பதை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ad

ad