செவ்வாய், மார்ச் 15, 2016

நடிகர்–நடிகைகள் தற்கொலையை தடுக்க நடிகர் சங்கத்தில் மனோதத்துவ பயிற்சிதென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. 

விழாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.   நிகழ்ச்சியில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கப்பட்டது. இதில் ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி அதிபர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டார். 

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:– நடிகர் சாய் பிரசாந்த்தின் துர்மரண செய்தி, மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது. மருத்துவத்தை விட மேலானது மனோதத்துவ முறையிலான சிகிச்சை.  இந்த நடிகர் சங்கத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயம், 

நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனோதத்துவ முறையிலான சிகிச்சை மையம் அமையும் என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன். இந்த ஆறு மாத காலத்தில், ஆறு வருட பணியை செய்து முடித்திருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன், தீபாவளிக்கான பொருட்கள் வினியோகம் செய்வது என்று ஒரு பணி. உறுப்பினர்கள் எல்லாரும் தான் ஒரு நடிகன் என்பதை மறந்து சிறப்பாக வேலை செய்தார்கள். 

நடிகர் சங்கத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் போது நான் இதெல்லாம் முடியுமா என்று யோசித்தபோது, இளைய தலைமுறையினர் என்னிடம், இலக்கை நிர்ணயம் செய்த பிறகு அதை நோக்கி பயணம் செய்வோம் என்று கூறினார்கள். அதையே இப்போது பின்பற்றுகிறோம். 

சங்கத்தின் முதல் திட்டம் ‘குருதட்சணை திட்டம்’. முதலில் இது ஓய்வூதியம் என்று தானிருந்தது, நமக்கு முன் வந்த நமக்கு குருவாக இருந்த சங்க உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் என்பதற்கு பதிலாக குருதட்சணை என்று கொடுப்போம் என்று வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். அதற்கு உறுதுணையாக இருந்த ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு மிக்க நன்றி. 

நோய் என்பதற்கு வயது வரம்பு கிடையாது, எனவே சங்க உறுப்பினர்கள் 3500 பேருக்கும் மருத்துவ வசதி செய்து கொடுக்கிறேன் என்று உறுதி கொடுத்தார். மேலும் அவர் இந்த 3500 பேரில், 3000 உறுப்பினர்கள், கலைஞர்கள் இதை பயன்படுத்தாமல் ஆரோக்கியமாக இருந்தால் நான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறினார். 

மேலும் அவர், மாதம் 1000 ரூபாய் வீதம் 150 நடிகர் சங்க உறுப்பினருக்கு பென்சன் வழங்குவேன் பிரசவத்திற்கு முழுவதும் இலவசம். பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு மருந்துக்கு மட்டும் செலவு செய்தால் போதும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக தரப்படும் என்றும் ஏ.சி.எஸ். அறிவித்துள்ளார். இதற்கு உங்கள் அனைவரது சார்பாக, உங்களில் ஒருவனாக நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ’