புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

‘மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’ சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

T


மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள்நல கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன், மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னி அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

சமூக நீதி

ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:-

உடுமலைப்பேட்டை ஆணவ கொலையில் தொடர்புடைய நபர்கள் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக சில கட்சிகள் சாதி அரசியலை தூண்டுகின்றன. பெரியார் பிறந்த இந்த மண்ணில் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் சாதி விதைகள் விதைக்கப்படுகிறது.

சாதி வெறி என்ற நஞ்சை விதைப்பவர்கள் சமூக விரோதிகள். சாதி ஆணவ கொலையை அவர்கள் தூண்டிவிடுகிறார்கள். சாதிய பார்வை மக்கள்நல கூட்டணிக்கு கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களை சமூக நீதி என்ற வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் சாதி ஆணவ கொலையை கண்டிக்கவில்லை.

திருச்சியில் முற்றுகை போராட்டம்

திருச்சி அகதிகள் முகாமில் உள்ள தயன்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறி அவரை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சிறிசேனா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பா.ஜனதா அரசும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.

அதற்கு அ.தி.மு.க. அரசும் உறுதுணையாக இருந்து வருகிறது. இதனை கண்டித்து தயன்ராஜ் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். தயன்ராஜூக்கு ஆதரவாக இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கள்நல கூட்டணி சார்பில் திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

கூட்டணியில் விஜயகாந்த்

மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் என்றும், அந்த கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் விஜயகாந்த் தெளிவாக அறிவித்துவிட்டார்.

ஆனாலும் தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். தொலைக்காட்சிகள், செய்தித்தாள்களில் வெளியான செய்திகளை கருணாநிதி பார்க்கவில்லையா?. கூட்டணிக்கு வர விருப்பம் இல்லாதவரை திரும்ப திரும்ப அழைக்கும் தி.மு.க.வின் நிலை வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு வைகோ பேசினார்.

ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக்கட்சி அல்ல. சாதி கொடுமையை ஆதரிப்பவர்கள் தான் சாதிக்கட்சி. கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என்றார்.

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன் பேசும்போது, மக்கள்நல கூட்டணி சமூக அக்கறையோடு சாதி ஆணவ கொலைக்கு எதிராக போராடி வருகிறது. உடுமலைப்பேட்டை சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, இதை விட முக்கியமான செய்திகள் ஏராளமாக இருக்கின்றன என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இதுதான் அவர்களின் உண்மையான முகம். இப்படிப்பட்ட கேடுகேட்ட நிலைதான் இன்று இருக்கிறது என்றார்.

ரா.முத்தரசன்

ரா.முத்தரசன் பேசும்போது, ‘மக்கள்நல கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சாதி மறுப்பு திருமணம் ஆதரிக்கப்படும். இவ்வாறு செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார். 

ad

ad