புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2016

'விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!

தேமுதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள்,
விரைந்து முடிவெடுக்க விஜயகாந்த்தை நெருக்கி வருகின்றனர்.

கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த தேமுதிக மகளிரணி மாநாட்டில், "தேமுதிக தனித்தே களம் இறங்கும், எங்கள் தலைமையை விரும்புவர்கள் எங்களுடன் சேரலாம்" என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தமிழக அரசியல் போக்கு மாறியது. கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த் என்று கடைசி வரை நம்பிய திமுகவுக்கு கற்பனையில் கூட 'பழம்' கிடைக்காமல் போனது. பெரிதும் நம்பிய பாஜகவிற்கு, விஜயகாந்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால், ஆரம்பத்திலிருந்து தங்களுடன் கரம் கோர்க்க விஜயகாந்தை அழைத்து வரும் மக்கள் நலக்கூட்டணி மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் விஜயகாந்த் தனது முடிவை அறிவித்து 6 நாட்களாகியும் அவரோடு இணையும் கட்சிகள் எவை? என்பதற்கு விடை கிடைக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளோடு தொகுதிப்பங்கீடு குறித்து பேசும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு சென்றுவிட்டன. மக்கள் நலக் கூட்டணியோ 4 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டது. பாஜக தம்மை ஆதரிக்கும் கட்சிகளை சந்தித்து வருகிறது. பாமக மாவட்டம் தோறும் துண்டு பிரசுர பிரச்சார பயணத்தை நடத்திவருகிறது. தமாகாவோ யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறது.

இந்நிலையில் தேமுதிகவோ,  வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நிறைவு செய்த நிலையிலேயே நிற்கிறது.  இந்த மந்த நிலை, தனித்துப்போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என அறிவித்த  தேமுதிகவிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்  என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் அரங்கில் தீவிரமடைந்துள்ளன. இதே கருத்தைக் கொண்டுள்ள மக்கள் நலக் கூட்டணியும்  விஜயகாந்தின் எண்ண ஓட்டம் எதுவாக இருக்கும் என்று அதிதீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே,  அவ்வப்போது கடந்த 6 நாட்களில் பலமுறை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்,  'எங்களோடு இணையுங்கள்' என்று விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தொடர் மௌனம் காக்கிறது தேமுதிக.

இதில் மக்கள் நலக் கூட்டணி கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளது என்றும்,  அதனால் விரைந்து தனது முடிவை விஜயகாந்த் எடுக்கவேண்டும் என்றும், அது மக்கள் நலக் கூட்டணியோடு இணையும் வகையில் இருக்கவேண்டும் என்றும் விஜயகாந்திற்கு தெளிவாகச் சொல்லி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த்,  மக்கள் நலக்கூட்டணிக்கு வருவதை எங்கள் அணிக்கான பலமாகவே பார்க்கிறோம் என்றும், அவர் விரும்பிய  எண்ணிக்கையில் வேட்பாளர்களை களமிறக்கலாம் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி பரிசீலனை செய்துகொள்ளலாம் என்றும் தேமுதிக தலைமைக்கு உறுதியாக தெரிவித்தாகிவிட்டது என கூறுகிறார்கள் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தினர்.

இத்தோடு நில்லாமல், விறுவிறுப்பாக பிரசார பயணத்தை நடத்தியும்,  தேர்தல் நாளில் செய்யவேண்டிய வேலைகள் குறித்து விரிவான ஆலோசனைகளிலும் மக்கள் நலக் கூட்டணி இறங்கியுள்ளது. அதில், தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் வாரியாக 40 நபர்களை நியமிப்பதும், அவர்களுக்கான பணியினை திட்டமிடுவதும் அடங்கும். தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் பூத் பொறுப்பாளர்கள் என்று மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,விசிக சார்பில் தலா 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த 40 பேரும் வாக்குகளை மக்கள் நலக் கூட்டணிக்குக் கொண்டுவர உறுதியுடன் செயல்படுவார்கள் என்றும் ம.ந.கூ. மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டமிடல் அதிமுக, அதிமுகவை நிச்சயம் கிலி பிடிக்கவைக்கும் என்று கூறுகிறார்கள் 'தோழர்கள்'.

இந்த பூத் பிளான் வெற்றியானால்,தொகுதிவாரியாக 30 ஆயிரம் வாக்குகள் தோராயமாக, கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஏற்கெனவே மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு உள்ள வாக்கு சதவீதத்தைக் கூட்டும் என்பதால் திமுக, அதிமுகவிற்கு கடுமையான  நெருக்கடி கொடுக்க முடியும் என்று ம.ந.கூ. வட்டாரம் அழுத்தமாக நம்புகிறது.
இதையெல்லாம் மிக சரியாகச் செய்ய தேமுதிக உதவியும் கிடைத்தால் நிச்சயம் வெற்றியை எட்டிப்பிடிக்கமுடியும்  என்று கணித்துள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்,  தங்களின் இறுதிக்கட்ட அழைப்பை விஜயகாந்திற்கு விடுத்துள்ளனர். ஆனால் அவர், நிபந்தனைகள் விதிப்பதிலேயே கவனமாக இருக்கிறார் என்றும், முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதிலும், கூட்டணியின் பெயரை மாற்றி, தனது தலைமையை ஏற்கவேண்டும்  என்பது போன்ற 'விதிகளை'  நீட்டியுள்ளார் என்றும் ம.ந.கூ. வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால்,விஜயகாந்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ம.ந.கூ. இறங்கியுள்ளது.

தங்களுடன் இருக்கும்  9% வாக்குகளையும் தேமுதிகவிற்கு இருக்கும் 10% வாக்குகளையும் ஒன்று சேர்க்கவும், மேலும் கூடுதல் வாக்குகளைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் நிச்சயம் அதிமுக, திமுகவை  வீழ்த்த முடியும் என்று தேமுதிகவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடனடியாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

என்ன செய்யப்போகிறார் கேப்டன்?

ad

ad