புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

கருத்துக்கணிப்புகள் பொய்யாவது இப்படித்தான்



ண்மையான தேர்தல் முடிவுகளை விட இப்போதெல் லாம் கருத்துக் கணிப்புகளும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்
கணிப்புகளும்தான் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இத்தகைய கணிப்புகள், தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்பு சில கட்சிகளை சந்தோஷப்படுத்தவும், சில கட்சிகளை தெறிக்க விடவும் செய்கின்றன.  
தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கம் அதிகரித்த சூழலில்தான், கருத்துக்கணிப்புகளின் கவனமும் அதிகரித்திருக்கிறது. சில நேரங்களில் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்படும் தன்மையும், எடுக்கப்படும் சூழலையும் கொண்டு உண்மையை ஏறக்குறைய பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. 

ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. 

2006-ம் ஆண்டு கருத்துக்கணிப்புகள் 


2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட சி.என்.என்., ஐ.பி.என்-தி இந்து கருத்துக்கணிப்புகளில் அ.தி.மு.க 46 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தி.மு.க 44 சதவீத வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடையும் என்றும் கூறப்பட்டது. அதேநேரத்தில் குட்வில் கம்யூனிகேஷன் என்ற அமைப்பு எடுத்த கருத்துக்கணிப்பில் தி.மு.க 149 இடங்களைப் பெறும் என்றும், அ.தி.மு.க 83 இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. 

முடிவை மாற்றிய தேர்தல் அறிக்கை 

2001-2006 ஆட்சி காலத்தில் அ.தி.மு.க ஆட்சி மீது எந்தவித எதிர்ப்பு அலையும் இல்லை என்று அப்போது கூறப்பட்டது. எனவேதான் கருத்துக்கணிப்புகளில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று ரிசல்ட் வந்திருப்பதாகக் கருத்தாக்கம் உருவானது. இதனால் ஆடிப்போன தி.மு.க, தனது தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அனைவருக்கும் இலவச டி.வி.,  ரேஷனில் ஒரு ரூபாய்க்கு அரிசி போன்ற அதிரடி அறிவிப்புகள் வெளியாகின. அப்போது தேர்தல் கதாநாயகன் தி.மு.க தேர்தல் அறிக்கைதான் என்று கூறப்பட்டது. அப்போது தேர்தல் களத்தையே மாற்றியது இந்த தேர்தல் அறிக்கைதான். தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி 163 இடங்களை பிடித்து ஆட்சியைப் பிடிக்க காரணமாக அமைத்தது.
2016 கருத்துக்கணிப்புகள் 

தற்போது வெளியாகும் கருத்துக்கணிப்புகளில்  மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று இந்தியா டி.வி- சி ஓட்டர்ஸ் கணித்துள்ளது. அ.தி.மு.க-வுக்கு 130 இடங்களும், தி.மு.க-வுக்கு 70 இடங்களும், பிற கட்சிகளுக்கு 30 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. நியூஸ் நேஷன் என்ற நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி 33 சதவிகித வாக்குகளைப் பெற்று 107 முதல் 111 தொகுதிகளைப் பிடித்து ஆட்சியமைக்கும்  என்று கூறப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க 103 முதல் 107 இடங்களைப் பெறும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 முதல் 18 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்கேடுகள், முறைகேடுகள் என பல புகார்கள் அ.தி.மு.க ஆட்சியில்  இருந்த போதிலும், 2006-ம் ஆண்டு தேர்தலைப்போலவே ஆளும் கட்சிக்கு எதிரான அலை இல்லை என்ற கருத்துகள் பேசப்படுகின்றன.  இந்த ஒரு சூழலில்தான் இந்த கருத்துக்கணிப்புகள் வந்துள்ளன. 

முடிவை மாற்றும் காரணிகள் 

தமிழகத் தேர்தல் களத்தில்,  தேர்தல் கூட்டணிகள் இப்போதுதான் ஓரளவுக்கு செட் ஆகி இருக்கின்ற நிலையில், இன்னும் தொகுதிப் பங்கீடுகள் நடக்கவில்லை. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. முக்கியமாக இன்னும் எந்த ஒரு பெரிய கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் தலைவர்களும், கேப்டன் விஜயகாந்த் அணியில் உள்ள விஜயகாந்தும் இன்னும் பிரசாரம் தொடங்கவில்லை என்பதும் கவனிக்க  வேண்டிய ஒன்று. பிரசாரக் களத்தாலும் கூட தேர்தல் கணிப்புகள் மாறும்.


தேர்தல் களத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில், கூட்டணி பலம், தொகுதியின் வேட்பாளரின் பலம், தேர்தல் அறிக்கை ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. இப்போது வெளிவந்த கருத்துக்கணிப்புகளில் இந்த அம்சங்களும் ஏதும் பிரதிபலிக்கவில்லை. எனவே இதன் தாக்கங்களால் தேர்தல் முடிவுகளில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தி.மு.க ஆட்சி அமைக்கவும் கூடும் அல்லது யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போகவும் கூடும். ஒரு வேளை குறைந்த ஓட்டுக்கள் சதவிகிதத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கவும் கூடும்.  தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், கேப்டன் விஜயகாந்த் அணி இரண்டாம் இடம் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் சூழலும் வரலாம். 

கடைசி நேரத்தில் முடிவெடுப்பவர்களால் மாறும் 


இந்த நியாயமான காரணங்களைத் தவிர,  இடைத்தேர்தலில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் பணமும் கூட,  கடைசி நேரத்தில் தற்போதைய தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும். இதைத்தவிர கருத்துக்கணிப்புகளில் இப்போது பரவலாக பலரும் தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன என்று பார்த்தால், 'நான் தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுப்பேன்' என்று சொல்லும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் வாக்காளர்கள் எதை வைத்து தீர்மானிப்பார்கள்? உள்ளூர் வேட்பாளர், தேர்தல் அறிக்கையின் இலவசங்கள் அல்லது அவருக்கு சாதகமாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் பணம் ஆகிய காரணிகள் கடைசி நேரத்தில் முடிவு எடுப்பவர்களால் மாறிவிடுவது உண்டு.  இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 

- கே.பாலசுப்பிரமணி 

ad

ad