புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் இன்று தொடக்கம்




சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

சென்னையில் உள்ள 20 தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவதுடன், தேர்தல் அறிக்கையும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடந்த 4-ந் தேதி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அன்றே, தனது சூறாவளி பிரசார பயண திட்டத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். தமிழகத்தில் 14 நாட்களும், புதுச்சேரியில் ஒரு நாளும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

35 ஆயிரம் பேருக்கு இருக்கைகள்

அதன்படி, சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தனது சூறாவளி பிரசாரத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்குகிறார்.

இதற்காக தீவுத்திடல் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு முன்பு 10 மீட்டர் அளவுக்கு இடைவெளிவிட்டு, தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு பின்புறம் தொண்டர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 35 ஆயிரம் பேர் வசதியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு பிரசார வேனில் புறப்படுகிறார்.

வேட்பாளர்கள் அறிமுகம்

வழி நெடுக அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கின்றனர். தொண்டர்கள் மத்தியில் இரட்டை விரலை காட்டியபடி, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களிக்க கோரி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆதரவு திரட்டுகிறார்.

தீவுத்திடலில் உள்ள 3-வது எண் கேட் வழியாக பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் வேனில் வந்து இறங்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேடைக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் கையசைக்கிறார். பின்னர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் அப்போது வெளியிடப்படும் என தெரிகிறது.

நேரடி ஒளிபரப்பு

பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும் காட்சிகள், சென்னையில் உள்ள 21 தொகுதிகளிலும் பிரசார வாகனங்களில் உள்ள பிரமாண்ட திரை மூலம் மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

அதன்படி, வில்லிவாக்கம் பஸ் நிறுத்தம், ஆர்.கே.நகர் ஏ.இ. கோவில் தெரு, சூளை தபால் நிலையம், நம்மாழ்வார்பேட்டை, யானைகவுனி குடிசைமாற்று வாரியம், ராயபுரம் எம்.சி. ரோடு, மயிலை மாங்கொல்லை, கோயம்பேடு பஸ் நிலையம், வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை உள்ளிட்ட இடங்களில் இந்த பிரசார வாகனங்கள் நிறுத்தப்பட்டு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடைசியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மார்ச் மாதம் 1-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவந்தார். அதன்பிறகு, 38 நாட்கள் கழித்து இன்று தான் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணிமனைகள் திறப்பு

இதற்கிடையே, அ.தி.மு.க. போட்டியிடும் 227 தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று காலை 10.30 மணிக்கு தங்கள் தொகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்கள். காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் திறக்கப்படுகின்றன.

இவ்வாறு, ஒரே நாளில் தேர்தல் பணிகளை அ.தி.மு.க. துரிதப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. 

ad

ad