புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ராஜேஷ் லக்கானியிடம் அ.தி.மு.க. புகார்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று ராஜேஷ் லக்கானியிடம்
அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மீது நடவடிக்கை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அ.தி.மு.க. வக்கீல் எ.திவாகர், சி.திருமாறன், ஓ.செல்வம் ஆகியோர் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது;–
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 25–ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளருடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கருணாநிதியுடன் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருவாரூர் சட்டமன்ற தேர்தல் அதிகாரி மற்றும் கருணாநிதி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதுபோல பென்னாகரம் தொகுதியில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோதும் எண்ணற்ற அளவில் பலர் அவருடன் சென்று, தேர்தல் விதிகள் மீறப்பட்டன. இதுதொடர்பாக பென்னாகரம் தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் அன்புமணி ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சார தடை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முக்கிய எதிர்க்கட்சியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக அவர்கள் திட்டமிட்டு அடிக்கடி மின்தடையை குறிப்பாக இரவு நேரத்தில் ஏற்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் தீய நோக்கத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் ரகசிய கூட்டம் போட்டு இதை செயல்படுத்தி வருகிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுடன் பேசி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. பணம் பதுக்கல்
இதற்கிடையே, அ.தி.மு.க.வின் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் வெற்றிவேல் நேற்று பிற்பகலில் ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தி.மு.க. மீது புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;–
சென்னையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் ஓட்டுக்காக பணம் கொடுக்கின்றனர். தலைமைச் செயலகத்தின் அருகில் கூட பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
அதுபோல கோடிக்கணக்கில் பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இதற்கான தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகாராக அளித்திருக்கிறோம். அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் எந்தெந்த இடத்தில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என்பதை முகவரியோடு தகவலாக கொடுத்திருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad