புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

மதுரையில் இன்று நடந்தது மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரையில் இன்று மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதனை கண்டு தரிசனம் பெற்றனர்.

மதுரையில் தற்போது தேர்தல் பரபரப்பை முந்தி நிற்பது மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழா, இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 10–ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. அன்று முதல் மதுரை நகர் விழாக் கோலம் பூண்டே காணப்படுகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை – சுந்தரேசுவரர் வீதி உலா என விழாகளை கட்டியே காணப்படுகிறது.
அதிலும் இரவு உலாவின் போது, சுவாமி – அம்மன் முன்பாக மின்னொளியில் பட்டாடைகள் உடுத்தி சிறுவர்–சிறுமிகள் கோலாட்டமடித்து ஆடிச் செல்வதை பார்க்க மாசி வீதிகளில் பலர் திரள்வதுண்டு. கடவுள்களின் வேடங்களிலும் அவர்கள் வந்து பலரையும் மகிழ்வித்தனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 17–ந்தேதி இரவு விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் அம்மன் சன்னதி, ஆறுகால் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின் போது, மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்து, பவள ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, வைரக் கல் பதித்த செங்கோலும் வழங்கப்பட்டது. இதனைக் காண நகரின் பல பகுதி மக்களும் திரண்டனர்.
மதுரையின் அரசியாக பதவியேற்ற மீனாட்சி அம்மன், எட்டு திக்குகளுக்கும் பயணம் செய்து, அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்றதாக வரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் வகையில், அரசியாக பதவியேற்ற மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் செல்லும் வைபவம் நேற்று நடைபெற்றது.
கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு எழுந்தருளிய மீனாட்சி, பிரியாவிடை – சுந்தரேசுவரர், நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்தனர். அப்போது மதுரையின் அரசி மீனாட்சிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. எட்டு திக்குகளையும் வென்று வரும் மீனாட்சி அம்மன், சுவாமியை எதிர்கொள்ளும் போது, அவரே தன்னை கரம் பிடிப்பவர் என உணர்ந்து நாணம் கொள்கிறார். இதனை நினைவுபடுத்தும் வகையில் திக்கு விஜய ஊர்வலத்தின்போது, ஓர் இடத்தில் விளக்குகள் அணைத்து மீண்டும் ஒளி பெற்றன.
இதனைத் தொடர்ந்து மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடக்கும் வைபவம் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) கோவிலில் நடைபெற்றன. வடக்காடி வீதியில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 8.15 மணி அளவில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானையுடனும், அதனை தொடர்ந்து பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். பின்னர் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் மணமேடைக்கு வந்தனர்.
சுந்தரேசுவரரின் பிரதி நிதியாக செந்தில் பட்டரும், மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாக சிவக்குமார் பட்டரும் இருந்தனர். 8.30 மணி அளவில் இந்து அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் சங்கல்பம் பூஜையை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்றன. 8.40 மணி அளவில் பவளக்கனிவாய் பெருமாள் மீனாட்சி அம்மனை தாரைவார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
8.54 மணிக்கு சுந்தரேசுவரர்– மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமியின் பிரதிநிதி அம்மனுக்கு மங்கல நாணை அணிவித்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பெண்கள் புதுதாலி அணிந்து கொண்டனர்.
இந்த திருமணத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் குவிந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக எல்.சி.டி. டிவிக்கள் பல இடங்களிலும் வைக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டன. இதனை கண்ட பக்தர்கள் மீனாட்சி– சுந்தரேசுவரர் கல்யாணம் முடிந்ததும் தாங்களும் புது தாலி அணிந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கட்டிய கயிறு, குங்கும டப்பா போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன. திருக்கல் யாணத்தை முன்னிட்டு சித்திரை வீதிகளில் அமரும் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரைகள் அமைக் கப்பட்டு இருந்தன. குடிநீர் தொட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரகுமார் யாதவ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன.
விழாவின் 11–ம் நாளான நாளை (20–ந் தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. 21–ந் தேதியோடு மீனாட்சி சித்திரை திருவிழா முடிவடைகிறது. மறுநாள் (22–ந்தேதி) கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

ad

ad