வெள்ளி, ஏப்ரல் 01, 2016

தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

னது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு, மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீரப்பளித்தார். 

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி ஜெயன் என்பவர் உயிரிழந்தார். 

கந்தசாமி ஜெயனின் மனைவி திருநெல்வேலி பனிக்கர் வீதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். தனது தங்கையின் மரணத்துக்கு மைத்துனனே காரணம் எனக்கருதிய சதீஸ், தனது மைத்துனரை துரத்தித்துரத்தி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சதீஸைக் கைது செய்தனர். 

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேல் நீதிமன்றத்தில் எதிரிக்கு எதிராக 3 பொலிஸ் சாட்சியங்கள், 1 வைத்தியசாலை சாட்சியம் மற்றும் 2 சிவில் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. தனது தங்கையின் மரணத்துக்கு மைத்துனரே காரணம் என்ற ஆத்திரத்தில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக எதிரி ஒப்புதல் வாக்குமூலமளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.