புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

"எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க": சங்கர் படுகொலையை உருக்கமாக விவரித்த கௌசல்யா

உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென பேட்டியளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவை கலப்புத் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் கடந்த மார்ச் 13ம் திகதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சங்கர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைவெறி தாக்குதலில், கௌசல்யா (19) பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது சங்கரின் வீட்டிற்கே திரும்பியுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் கௌசல்யாவின் தந்தை, தாய், மாமன் மற்றும் கொலை செய்த 4 பேர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கௌசல்யா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சங்கரை என் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எனக்கு தெரியும். ஆனால் நான் அவர்களை சமாதானப்படுத்த முடியும் என நம்பினேன்.
சங்கர் மிகவும் அற்புதமான நபர், நான் தான் அவருக்கு எல்லாமாக இருந்தேன். அவர் தலித் என்பதால் அவரை என்னால் காதலிக்காமல் இருக்க முடியவில்லை.
சாதிவெறி என்பது முட்டாள்தனம். அவரை என்னால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நான் என் பெற்றோரை மன்னிக்கவே மாட்டேன். அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்.
நான் முதன் முதலில், 2014ம் ஆண்டு கல்லூரி செல்லும் பேருந்தில் தான் அவரை சந்தித்தேன். முதலில் அவர் மீது எவ்வித ஈர்ப்பும் ஏற்படவில்லை.
ஆனால் 2 மாதத்தில் அவர் என் மனதை திருடிவிட்டார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கினோம். தினமும் இரவில் தொலைபேசியில் உரையாடினோம்.
பின்னர் 11 மாதங்கள் கழித்து, எனது காதலை தந்தை மற்றும் தாயிடம் கூறிய போது அவர்கள் அதனை ஏற்கவில்லை.
என் தந்தை மிகவும் கோபப்பட்டார். நான் ஒரு மாதம் முழுவதுமாக அவரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில், எனக்கு எம்.பி. ஏ படித்த மாப்பிள்ளை ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இதையடுத்து, என் தந்தையிடம், திருமணம் செய்தால் நான் சங்கரை தான் செய்வேன் என கூறினேன். அதற்கு, அப்படி நீ திருமணம் செய்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என என் தந்தை என்னை எச்சரித்தார்.
ஆனால் நாம் மணந்தால் சங்கரை தான் மணக்க வேண்டுமென உறுதியாக இருந்தேன். நான் வேறொருவரின் மனைவியாக விரும்பவில்லை. சங்கரும் அதையே தான் விரும்பினார்.
நாங்கள் என் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தால், பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை அறிந்தும், நாங்கள் சங்கர் குடும்பம் முன்னிலையில், இந்து கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டோம்.
அன்று தான் என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் ஆகும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று 7 நாள் கழித்து தான் என் குடும்பத்தினர் தெரிந்து கொண்டனர்.
கோபமடைந்த என் தந்தை, சங்கரை விட்டு பிரிந்து வருமாறு என்னை அழைத்தார். இல்லையெனில் எங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார். ஆனால் அது வெறும் மிரட்டல் தான் எண்ணிய நான் அதனை பெரிதாக நினைத்து பயப்படவில்லை.
இதையடுத்து 8 மாதம் கழித்து தான் அந்த கொடூரம் நிகழ்ந்தது. நாங்கள் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது, திடீரென பைக்கில் வந்த சிலர் எங்களை தாக்கினர். அதில் நான் சுயநினைவின்றி கீழே விழுந்துவிட்டேன்.
நான் கடைசியாக கண்ட காட்சி, சங்கர் என்னை அந்த தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றது தான், ஆனால் அவரும் பலமாக தாக்கப்பட்டிருந்தார்.
நாங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தோம், பொலிசார் மற்றும ஆம்புலன்ஸ் எங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆம்புலன்ஸில் இருந்த போது, சங்கர் பேசியதை என்னால் கேட்க முடிந்தது. அவர் எனக்கு முதலில் சிகிச்சை அளிக்குமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
தாக்குதலில், அவரது விரல்கள் வெட்டப்பட்டிவிட்டன, மேலும் அவரது கழுத்தில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிந்து கொண்டே வந்தது.
அவர் கடைசியாக என்னிடம், நான் எப்போதும் உன்னை காதலிப்பேன் என கூறினார். சிறிது நேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதனை கேட்ட எனக்கு, என் வாழ்வே முடிந்துவிட்டது போல இருந்தது. இதயம் நொறுங்கி போன நான், இன்னும் ஏன் உயிரோடிருக்கிறேன்? என எண்ணினேன்.
என்னால் சங்கர் இறந்துவிட்டதை நம்பமுடியவில்லை. நானும் அவரும் எங்கள் வாழ்க்கையை பற்றி பல விடயங்கள் திட்டமிட்டிருந்தோம். அவருக்கு ஒன்றும் ஆகாது எல்லாம் சரியாகி விடும் என நம்பினேன். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
ஒரு தந்தையே தனது சொந்த மகளுக்கு எப்படி இப்படி செய்ய தோன்றும்? நான் தான் அவர்களது ஒரே மகள். நான் எனக்கு பிடித்த நபரை காதலித்தேன் அதில் என்ன தவறு?
என் குடும்பத்தினருக்கும் எனக்கும் இனி எவ்வித தொடர்புமில்லை. அவர்களை நான் இனி பார்க்க விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை, அவர்கள் என் கணவரை கொலை செய்தவர்கள். அவர்கள் மீது எந்த பாசமும் பந்தமும் எனக்கு இல்லை.
இந்தியா இந்த சாதி முறையை ஒழிக்க வேண்டும். காதலிப்பது குற்றம் போல சிலர் சாதிக்காக கொல்லப்படுகின்றனர். சிலர் குடும்பத்துக்காக காதலையே தூக்கி எறிகின்றனர்.
என் வாழ்க்கைக்கும் இனி அர்த்தமே இல்லை. நான் என் காதலையே இழந்து விட்டேன். என் வெறுமையை இனி எந்த விடயத்தாலும் நிரப்ப முடியாது என உருக்கமாக பேசியுள்ளார்.

ad

ad