புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன்: தி.மு.க. வேட்பாளர் ஆவேசம்

கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன் என்று தி.மு.க. வேட்பாளர் கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.
தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க. தொடங்கியதற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 1996–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ரவிசங்கரிடம் 634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி அடைந்தார். அதன்பிறகு இப்போது தான் சட்டசபை தேர்தலை சந்திக்கிறார்.
கோவில்பட்டி தொகுதியில் அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக சுப்பிரமணியனும், அ.தி.மு.க. வேட்பாளராக ராமானுஜம் கணேசும் போட்டியிடுகின்றனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியன் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையை சேர்ந்தவர். இவர் கழுகுமலை டவுன் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
வைகோவை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக அவர் கூறியதாவது:–
இந்த தொகுதியில் வைகோவை நான் வீழ்த்துவேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர தி.மு.க. தொண்டனாக இருந்து வருகிறேன். 5–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். நான் அதிகம் படிக்கவில்லை என்றாலும் இந்த மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன். அவர்களுக்காக கடுமையாக பணியாற்றி உள்ளேன்.
நான் இந்த மண்ணின் மைந்தன். ஆனால் வைகோ வெளியூரை சேர்ந்தவர். அப்படி இருக்க எப்படி இந்த ஊர் மக்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள்? வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு துரோகம் செய்தவர். எனவே இங்குள்ள ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் கடுமையாக உழைத்து அவரை தோற்கடிப்பார்கள்.
நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தேவர் சமூகத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் வைகோவும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த தொகுதியில் தேவர் சமூகத்தை சேர்ந்த 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் 52 ஆயிரம் பேரே உள்ளனர். வைகோவும், ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த ஓட்டு 2 ஆக பிரிந்து விடும். நான் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. வேட்பாளர் ராமானுஜம் கணேஷ் கூறியதாவது:–
அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறுவது உறுதி. 1991–ம் ஆண்டில் இருந்து இந்த தொகுதியில் அ.தி.மு.க.வோ, அதன்கூட்டணி கட்சிகளோ தான் வெற்றி பெற்று வந்துள்ளன. எனது வெற்றி என்பது கல்வெட்டில் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.
இங்கு அம்மாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவருடைய திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. நான் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad