புதன், ஏப்ரல் 27, 2016

காலி மே தினக் கூட்டத்தில் அரச சொத்துக்களை பாவிக்க தடை! ஜனாதிபதி உத்தரவு

காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும்
பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பிரதம செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனைதெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் இந்தக் கூட்டத்துக்கு வருபவர்கள் ஏற்பாடு செய்யும் பஸ்களுக்கான கட்டணங்களைச் செலுத்தவேண்டும் எனவும், அரச உத்தியோகத்தர்கள் எக்காரணம் கொண்டும் அரச வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி நிபந்தனை விதித்திருப்பதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில், காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்துக்கு நாடெங்குமிருந்து பெருந்தொகையான மக்கள் வருவார்கள் என்பது உறுதியாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மாத்திரம் 124 பஸ்களில் மக்கள் வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, மே தின கூட்டத்திலும் ஊர்வலத்திலும் கலந்துகொள்பவர்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காத வகையில் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.