புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2016

சிங்கள பத்திரிகைல் பொதி செய்யப்பட்ட தற்கொலை அங்கி,குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?



யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
என்ன நோக்கத்துக்காக? இந்த தற்கொலை அங்கியும் குண்டுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன? யாரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயற்சி எடுக்கப்பட்டதா என்ற தோரணையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
பிரபுக்கள் பாதுகாப்பு மற்றும் விஷேட நிலைமைகள் தொடர்பிலான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பதில் பொலிஸ் மா அதிபருமான எஸ்.எம்.விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய எட்வர்ட் ஜூலியஸ் எனும் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரை சாவகச்சேரி பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்றுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர்கள் அவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை வரை செய்யப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த தற்கொலை அங்கி, கிளைமோர் குன்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடி பொருட்கள் குறித்த வீட்டிலிருந்து பிறிதொரு இடத்துக்கு கொண்டு செல்லவே தயார் நிலையில் பொதி செய்து வைக்கப்பட்டிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகை ஒன்றினால் அவற்றை மறைத்து பொதி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிங்களப் பத்திரிகை பொதி செய்ய பயன்படுத்தப்பட்டமையில் ஏதேனும் சாதக நிலமை ஒன்று இருக்கலாம் என சந்தேகிக்கும் பயஙகரவாத புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இதனிடையே கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கியுள்ள வாக்குமூலத்தில், யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பகுதியில் இருக்கும் வாகனங்களில் இருந்தே குறித்த வெடிபொருட்களையும், தற்கொலை அங்கியையும் பெற்றுக்கொண்டதாகவும், வெடபொருட்கள் தனது தொழிலான மீன் பிடி தொழிலை முன்னெடுக்க உதவும் என்பதாலேயே எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் விசாரணையாளர்கள் அவரது அந்த வாக்கு மூலத்தை நிராகரிக்கின்றனர்.
கைவிடப்பட்ட வாகனங்களில் அத்தகைய வெடி பொருட்கள், தற்கொலை அங்கி மறைத்து வைக்கப்பட வாய்ப்புக்கள் குறைவு என சுட்டிக்காட்டும் விசாரணையாளர்கள், சந்தேக நபர் தொழிலுக்காக கொன்டு வந்திருப்பின் கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், 100 தோட்டக்கள் என்பன எதற்காக கொண்டுவரப்பட்டன என்பது குறித்து ஆராயப்படல் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
இந் நிலையிலேயே அவரது அந்த வாக்கு மூலத்தை பயங்கரவாத புலனாய்வாளர்கள் நிராகரிக்கின்றனர்.
இதனிடையே கைதாகியுள்ள சந்தேக நபர் தொடர்பில் வேறாக செய்யப்பட்ட விசாரணைகளிலும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதன்படி சந்தேக நபர் தனது 13வது வயதிலேயே விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர் என தெரிவிக்கும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி, இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னியில் இருந்து புலிகளின் பிடியையும் மீறி சந்தேக நபர் வவுனியா வந்து கூலி வேலைகளை செய்து சிவில் சமூகத்துடனான தனது வாழ்வை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் உறுதியானதாக குறிப்பிட்டார்.
குறித்த சந்தேக நபர் ஒரு மீன் வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், மீன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை செய்வதாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந் நிலையிலேயே அவரது மனைவி பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது கணவர் வீட்டில் கஞ்சா பொதிகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்தே அவர் பொலிஸாருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,  செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில், குறித்த நபர் வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சந்தேகநபர், இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்தே, அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து, பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர்.
அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அவருடைய மனைவி, அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். அதேவேளை, சந்தேகநபர் தொடர்பிலான விவரம் அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.
மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருவதாக தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே, அக்கராயன் குளம் பகுதியில் தனது டிமோ பட்டா ரக லொறியில் தென் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்து விட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரியவருகின்றது.
இந் நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன. சந்தேக நபரின் தொலைபேசி இலக்கம் பூரண வலையமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அவரது தொலைபேசிக்கு உள் வந்த, வெளிச் சென்ற அழைப்புக்கள், அவரது வெளி நாட்டு தொடர்புகள் குறித்து ஆராயவே அது குறித்த ஆய்வுகளை ஆரம்பித்ததாக பொலிஸ் தலமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, ஆயுத கட்டளைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் தற்சமயம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளதாகவும், குறித்த நபருடனான சந்தேக நபரின் தொடர்புகளை உறுதிப்படுத்தும் சான்றுகளை தற்சமயம் புலனாய்வாளர்கள் சேகரித்து வருவதாகவும் அறிய முடிகிறது.
அத்துடன் குறித்த ஆயுதங்கள், தற்கொலை அங்கி ஆகியன வெள்ளவத்தை பகுதிக்கு கொண்டு வர தயார் நிலையில் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்து தொடர்பிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விளக்கம் கோருவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் நேற்று மாலை வரை பயங்கரவாத புலனய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளில், மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்டவை எங்கு கொண்டு செல்லப்பட, யாரை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டது என்பதற்கான உறுதியான தகவல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டிருக்கவில்லை.
சம்ப்வம் குறித்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, சாவகச்சேரி வீட்டிலிருந்து தற்கொலை அங்கியொன்றும், நான்கு கிளைமோர் ரகத்தைச் சேர்ந்த குண்டுகள், இரு கிளைமோர் ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பெட்டரிகள், 12 கிலோ கிராம் நிறைக் கொண்ட அதி சக்தி வாய்ந்த 12 கிலோ ரி.என்.ரி. வெடிபொருட்கள், 9 மில்லிமீற்ரர் ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் 100 (இரு பெக்கட்டுக்கள்) ஆகியன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இவை நேற்று நீதிவான் முன்னிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னிலைப்படுத்தப்ப்ட்டதுடன் தற்சமயம் அவை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
குறித்த ஆயுதங்கள், வெடி பொருள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியன நல்ல நிலையிலேயே உள்ளதாக வட பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ad

ad