புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2016

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?

கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த
பணம் இடைநடுவில் சுருட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த பரபரப்பான செய்தியொன்றை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அபூநுஹா என்பவர் குறித்த செய்தியைத் தொகுத்துள்ளார்.
2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் சரிசமமான போட்டியுடன் களத்தில் நின்றிருந்தனர்.
கடைசிநேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வாக்களிப்பை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் மூன்று லட்சம் பேர் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டனர்.
அவ்வாறான சூழலில் நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஒருலட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.
குறித்த தேர்தலின் போது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் ரணிலுக்கு ஆதரவான வாக்குகள் கிடைப்பதைத் தடுத்து தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவினால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பாரிய தொகைப் பணம் கைமாற்றப்பட்டிருந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான தகவல்களை முதன்முதலாக கடந்த 2007ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து ஸ்ரீபதி சூரியாரச்சி அம்பலப்படுத்தியிருந்தார்.
அதன்போது தானும் பசில் ராஜபக்ஷவும் விடுதலைப் புலிகளின் முகவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்ததாகவும்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக விடுதலைப் புலிகளுக்கு 200 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வேறு செயற்திட்டங்களின் பெயரில் பெருமளவுப்பணமும் விடுதலைப் புலிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்ததாவும்,
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த ராடா என்ற பெயரிலான வீடமைப்புத்திட்டம் வெறும் பெயரளவுத்திட்டம் மட்டுமே என்றும்,
அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் விடுதலைப்புலிகளுக்கே வழங்கப்பட்டதாகவும் தனது உரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாரச்சி அம்பலப்படுத்தியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீபதி பின்பு அதிருப்தியுற்று அவரை விட்டு விலகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி இந்தத் தகவல்களை அம்பலப்படுத்திய குறுகிய காலத்திற்குள்ளாக மர்மமான வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டிருந்தார்.
ஸ்ரீபதி சூரியாரச்சி, மங்கள சமரவீர ஆகியோருடன் மஹிந்தவை விட்டு அதிருப்தியில் வெளியேறியிருந்த டிரான் அலசின் வீடு மீதும் குண்டுத் தாக்குதல் ஒன்று நடைபெற்றிருந்தது.
சேதமடைந்த தனது வீட்டுக்கு முன்னால் நின்றபடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டிரான் அலசும் மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகைப் பணத்தை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதன்போது விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் வர்த்தக வலையமைப்பின் பிரதானி எமில்காந்தன் அந்த அமைப்பின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து புலிகள் அமைப்பிற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.
குறித்த எமில்காந்தன் என்பவரும், டிரான் அலசும் வர்த்தகப் பங்காளிகள் என்பதுடன் 2002ம் ஆண்டு இலங்கையின் தனியார் மொபைல் சேவையொன்றின் வடக்குப் பிராந்தியத்துக்கான விஸ்தரிப்பு நடவடிக்கைகளை இவர்களே முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் டிரான் அலஸின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன், பசில் ராஜபக்ஷ குறித்த பணத்தொகையை அங்கு வைத்து எமில்காந்தனிடம் கையளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கும் தகவல்களின் பிரகாரம் குறித்த பணத்தொகை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கையளிக்கப்படாமல் இடைநடுவில் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் முக்கியஸ்தர்கள் இருவர் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் இருவருடன் லண்டனில் நடைபெற்ற சந்திப்புகளின்போது விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்த பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கருணா அம்மானை தமது அமைப்பில் இருந்து பிரித்தெடுத்திருந்த கோபத்தில் ரணிலுக்கு எதிரான நடவடிக்கையாகவே தேர்தல் புறக்கணிப்பு குறித்த தீர்மானத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் பணத்தொகைப் பரிமாற்றத்தை ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர் பின்னாளில் திடீர் கோடீஸ்வரராக மாறியதுடன், ஊடக நிறுவனமொன்றையும் ஆரம்பித்திருந்தார்.
எனினும் குறித்த பணம் தனக்கு வெளிநாட்டு உளவு அமைப்பொன்றிலிருந்து ரணிலைத் தோற்கடிக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கான பரிசாக வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் தரப்பு மஹிந்தவிடமிருந்து குறித்த பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடையவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது சந்தேகத்துக்குரிய விடயமாக தற்போது நோக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மஹிந்த விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
குறித்த விசாரணை முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad