புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2016

யாழில் இயங்கி வந்த சுவிஸ் பணத்தில் உருவான சமூக விரோத குழு கண்டுபிடிப்பு

வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிக் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அண்மைக் காலமாக யாழ் குடா நாட்டில்
இடம்பெற்று வருக்கின்றன.
அதிலும் கடந்த இரு வாரங்களாக இச்சம்பவங்கள் பெரிதும் அதிகரித்துள்ளன.
இக்காலப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாள்வெட்டு சம்பவங்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவங்களினால் சுமார் பத்து பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
குறிப்பாக யாழ் குடா நாட்டில் வட்டுக்கோட்டை, கோப்பாய், மானிப்பாய், அரியாலை, சுன்னாகம், நாயன்மார்கட்டு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இற்றை வரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்டோரைப் பொலிஸார் விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், இராமநாதன் வீதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முயற்சி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
அந்நபரைப் புலன் விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து இக்குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் கடந்த ஞாயிறன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நீதிமன்றங்களில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் தொடர்பான ஒன்பது வழக்குகளின் நிமித்தம் தேடப்பட்டு வந்தவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் எனப் பொலிஸார்' மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இச்சமூக விரோத செயற்பாடுகளை இக்குழுவினர் யாழ். குடா நாட்டில் பாரிய வலையமைப்பாக முன்னெடுத்து வருவதும், யாழ்ப்பாணம், தட்டாரத்தெரு வாள்வெட்டு சம்பவம், அரியாலை, மாம்பழச் சந்தியிலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் , அப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகளின் பஸ் வண்டி மீதான தாக்குதல் , யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு , சட்டநாதர் கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் என்பவற்றில் இக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இக்குழுவினர் 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பவர்களாக உள்ளனர். இவர்களில் யாழ் குடா நாட்டு பாடசாலை மாணவர்களும் உள்ளனர்.
அதேநேரம் இக்குழுவினருக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி கிடைக்கப் பெறுவதாகவும் குறிப்பாக சுவிஸிலிருந்து பணம் வருகின்றதென பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக வட பகுதியில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவிக்கின்றார்.
இப்பணத்தைக் கொண்டு இக்குழுவினர் தமக்கு தேவையான ஆயுதங்களையும், மோட்டார் பைசிக்கிள்களையும் கொள்வனவு செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து வாள்கள், கைக்குண்டுகள், கோடரி என்பன மீட்கப்பட்டுள்ளன.
இக்குழுவைச் சேர்ந்த சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சமூக விரோத செயற்பாடுகளை யாழ். குடாநாட்டில் முன்னெடுக்கவும், அவற்றை ஊக்கவிக்கவும் இக்குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கப் பெறுகின்றது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.
இது தொடர்பாகப் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் மாத்திரமல்லாமல் சமூக நலன் விரும்பிகளையும் பல்வேறு மட்டங்களிலும் சிந்திக்க வைத்துள்ளது.
இச்செயற்பாடுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பன தொடர்பாக மக்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த அச்சம் பீதி நிறைந்த வாழ்வு 2015 ஜனவரி 08ம் திகதியோடு முடிவுக்கு வந்தது.
அத்தோடு வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டு மக்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கையும் எதிர்பாப்புக்களும் துளிர்த்தன.
இவ்வாறான நிலையில் யாழ் குடா நாட்டில் வாள்வெட்டு, வழிப்பறிக் கொள்ளை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கவென வெளிநாட்டிலிருந்து பண உதவி வழங்குவதானது இங்கு இயல்பு நிலையைச் சீர்குலைப்பதற்கான முயற்சியாகும்.
இதன் காரணமாக யாழ் குடா நாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொலிஸாரினதும் பாதுகாப்பு படையினரதும் கெடுபிடிகள் அதிகரித்து காணப்படுவதாகவும் உள்நாட்டிற்கும் வெளிநாட்டுக்கும் காண்பிப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் யாழ். குடா நாட்டு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவ்வாறான இன்னல்கள் இனியொரு போதும் இம்மண்ணில் ஏற்படக் கூடாது என்பது தான் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு நாட்டு மக்களினதும் பிரார்த்தனை.
இவ்வாறான நிலையில் யாழ் குடா நாட்டில் இச்சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்க உதவி ஒத்துழைப்புக்களை நல்குவது கண்டிக்கத்தக்கதாகும்.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போது தான் யாழ். குடாநாட்டு மக்கள் நிம்மதியாக பெருமூச்சு விடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்த அமைதி, நிம்மதியான வாழ்வு நீடித்து நிலைக்க வேண்டும். அதனை சீர்குலைக்க எவருக்குமே இடமளிக்கலாகாது.
ஆகவே சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்கவும், மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தவும் பொலிஸார் விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டினரின் நிதியுதவி மூலம் அரங்கேற்றப்படும் இச்சமூக விரோத செயற்பாடுகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ad

ad