புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு

இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்; 
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்
இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
“”இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. எனவே, விசாரணையை இறுதிப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை” என்று ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம நேற்று “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.
அத்துடன், “”காணாமல்போனோர் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளையும் தமது குழு நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, மட்டக்களப்பில் இம்மாதம் மக்கள் அமர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் அது நடைபெறாது எனத் தெரியவருகின்றது. நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிவரை வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தனது ஆட்சியின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை அமைத்தார்.
காலப்போக்கில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் வகையில் அதன் விடயப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டதுடன், ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் டி சிவ்லா தலைமையில் வெளிநாட்டு ஆலோசனைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
குறுகியகால விசாரணையின் பின்னர் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விசாரணை அறிக்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், காணாமல்போனோர் குறித்தான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கென விசேட குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பரணகம குழுவைக் கலைத்துவிட்டு தனிப்பணியகமொன்றை அமைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்குரிய வரைபுநகலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் பரணகம ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி வினவியபோது, “”எமது குழுவுக்குக் கிட்டத்தட்ட 25 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் இரட்டை முறைப்பாடுகளும் இருப்பதால் சரியாகக் கணிப்பிட்டுக் கூறமுடியாது. இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றோர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இசைப்பிரியா காணாமல்போயுள்ளார் என்றுகூட முறைப்பாடு அவர்களது உறவினர்களால் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான சம்பவங்கள் பற்றி விசாரிக்கவேண்டியுள்ளது. விசாரணையை இறுதிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. குழு கலைக்கப்பட்டால் அது சம்பந்தமான கோவைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்படும்” என்று சுட்டிக்காட்டினார் மெக்ஸ்வெல் பரணகம.
அதேவேளை, போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இறுதிக்கட்டப் போரின்போது, படையினரிடம் சரணடைந்த பின்னரே பாலச்சந்திரன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என்றும், இசைப்பிரியாவும் கொடுமைகளுக்குப்படுத்தப்பட்டே கொல்லப்பட்டார் என்றும் சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்ற ஆதார காணொளியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் வலியுறுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
……………………

ad

ad