புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழரின் வாழ்த்து

தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக
மீண்டும் தெரிவானார் என்ற செய்தியால் ஈழத்தமிழர்கள் மகிழ்வுற்றுள்ளனர்.
நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் தொடர்பில் துணிந்து சில தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவது, நிறைவேறாமல் போவது என்பதற்கு அப்பால்,ஈழத்தமிழர்கள் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானங்களை அறிவித்தால் தனக்கு இருக்கக் கூடிய எதிர்ப்புக்கள் பற்றி இம்மியும் கவலை கொள்ளாமல், இது தான் என்று துணிச்சலோடு எங்கள் தொடர்பில் அவர் அறிவித்த தீர்மானங்கள் எமக்கு ஆறுதலை தருவதாகும்.
இது மட்டுமன்றி; இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பு என்று சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி யதுடன்,ஈழத்தமிழர்களின் உரிமை தொடர்பிலும் சட்டசபையில் முக்கியமான தீர்மானங்களை கொண்டுவந்த பெருமை செல்வி ஜெயலலிதாவையே சாரும்.
தமிழக முதலமைச்சர் எடுக்கின்ற தீர்மானங்கள் என்பது, தமிழக மக்கள் ஈழத்தமிழர்களின் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை இலங்கை அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் ஏன்? சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்துவதாக அமையும்.
2009ம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தார். மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்தது.கலைஞர் கருணாநிதி முட்டுக்கொடுத்த காங்கிரஸ் ஆட்சி, ஈழத்தமிழர்களை கொன்றொழிப்பதற்கு இலங்கை அரசுக்கு பக்க பலமாக இருந்தது என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.
ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக நாடகம் நடித்தார். அரசியலில் அவர் நடித்த இறுதி நாடகம் அதுவாயிற்று.
2009 ல் வன்னிப் நிலப்பரப்பில் யுத்த கொடூரம் நடந்தபோது கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால், அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.அதைச் செய்யாத அவர் ஆட்சியை இழக்கும் பரிதாபத்திற்கு ஆளானார்.இது போதாதென்று 2016 மே 16 ஆம் திகதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து அதில் கலைஞர் கருணாநிதி மண் கெளவினார்.
செல்வி ஜெயலலிதா வெற்றி பெற்று முதலமைச்சரானார் என்ற செய்தி 2016 மே 19 ல் வெளியாகியுள்ளது.ஆம், தமிழர்கள் அன்றும் இன்றும் அழுத கண்ணீர், காரணமானவர்களை அறுத்து விழுத்தி வருகிறது என்பது மட்டும் உண்மை.
ஈழத்தமிழர்களை வதைத்த மகிந்த ராஜபக்ச­ பதவியிழந்தார்; அவருக்கு உதவிய இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியிழந்தது; காங்கிரஸுக்கு முட்டுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி இனி முதலமைச்சர் ஆகவே முடியாது என்று உணரும் அளவில் தோல்வியைக் கண்டார்.
ஆக, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் என்ற செய்தி ஈழத்தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த ஆறுதலை தருகிறது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர்கள் தங்கள் அழு கண்ணீரை துடைத்துக் கொண்டு அம்மா எங்கள் வாழ்த்துக்கள் என்று கூறுகின்றனர்.
இந்த வாழ்த்து போல் செல்வி ஜெயலலிதா எவரிடமும் பெற்றிருக்க முடியாது. அந்தளவுக்கு இது இதயத்தால் சொல்லும் வாழ்த்தாகும்

ad

ad