புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

வணிகர்கள் ஆதரவு தேமுதிக - தமாகா- ம.ந. கூட்டணிக்கு? - அதிரடி திருப்பம்!

மிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு, அரசியல் கட்சிகளையும் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் தொற்றிக் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில்
அடுத்த எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆளும் அதிமுகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒரு தொலைக்காட்சியும், இல்லை இல்லை திமுக கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று இன்னொரு தொலைக்காட்சியும் கருத்துக்கணிப்பு வெளியிட்டு அரசியல் கட்சிகள் மத்தியில் அனலை பரப்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும்  கருத்துக்கணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. இது ஒருபுறம் நடந்தாலும் பொதுவாக திமுக , அதிமுக, தேமுதிக -தமாகா -மக்கள் நலக் கூட்டணி என்று தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தமிழகம் முழுக்கவே அரசியல் பிரசாரம் அனலைக் கிளப்பி வரும் நிலையில், வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் அந்தந்தக் கட்சிப் பிரமுகர்களும்,  தொண்டர்களும் தங்களின் பங்கிற்கு வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்டு வருகிறார்கள். இதனால் காலை முதல் இரவு வரை 234 தொகுதிகளும் அரசியல் கட்சியினரின் வருகையால் அதிர்ந்து கிடக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தின்  மிகப்பெரும் சமூகமான வணிகர்கள் எந்தக் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் வணிகர்கள், அனைத்து மதத்திலும் சாதிகளிலும் இருக்கிறார்கள். தமிழ் அல்லாத மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் உள்ள அமைப்பாகவே வணிகர் சங்கங்கள் இருக்கின்றன. 

அந்த வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை த.வெள்ளையன் தலைமையிலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  விக்கிரமராஜா தலைமையிலும் இரண்டு பெரிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகளும் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அல்லது திமுக கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கிவருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,  அதிமுகவிற்கு தங்களின் ஆதரவை வெள்ளையன் தலைமையிலான  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அளித்தது. அப்போது வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விலைவாசியை குறைக்கவும், மின்வெட்டை சீர்செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஆனால் இப்போது,"உலக வர்த்தக ஒப்பந்தம் மூலமாக அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக விவசாயம், சில்லறை வணிகம், நெசவுத் தொழிலில் அந்நிய ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. சில்லறை வணிகத்தை ஒட்டு மொத்தமாக வெளிநாட்டினர் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.
இதனால், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சில்லறை வணிகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இருப்பினும், மாநில கட்சிகள் இது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை, கவலைப்படவும் இல்லை." என்று கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதோடு, தங்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகள் அதிமுக, திமுக ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்,வரும் பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும்." என்று வெள்ளையன் உறுதிபட தெரிவித்துள்ளார். வரும் 5ம் தேதி மேல்மருவத்தூர் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில்  33 வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு  நடைபெறவுள்ளது. அதில் சட்டமன்றத் தேர்தலில் வணிகர்களின் ஆதரவு எந்தக் கூட்டணிக்கு என்பதை வெள்ளையன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே போல கோவில்பட்டியில்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில்,  வரும் 5ம் தேதி வணிகர்களின் மாநில மாநாடு நடைபெறுகிறது. அது குறித்து விக்கிரமராஜா கூறுகையில், " மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை. கோவில்பட்டியில் மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு நடக்கிறது. வணிகர்களின் மனநிலை குமுறல் மே 16ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலின்போது எதிரொலிக்கும். " என்கிறார் உறுதியாக. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்," மக்கள் நலக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் நலனைக் காக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தவிர உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக வணிகர்கள்  ஆதரவு தர வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அரசியல் நிலை குறித்து தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி தரப்பில் கேட்டபோது, " வணிகர்கள் நலன் மட்டுமல்ல. எந்த நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையும் இன்னலுக்கு ஆளாகாமல் அமைதியாக, சமூக ஆரோக்கியமாக இயங்கவேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள். ஆனால் இதில் திமுக, அதிமுக கட்சிகள் வேறுபடுகின்றன. அத்தோடு தாங்கள் செய்த ஊழல் மற்றும் மக்கள் நலன் விரோத செயல்பாடுகளின் விளைவுகளைக் கவனிப்பதில்தான் அக்கறை காட்டுகின்றன. வணிகர் நலனிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை." என்று சொல்கின்றனர்.
இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பிரதிநிதி  ராஜாவிடம் கேட்டபோது, " உலக வர்த்தக ஒப்பந்தத்தை யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்குதான் எங்கள் ஓட்டு என்பதில் மாற்றம் இல்லை. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு என்பதை நாளை மறுநாள் (05.05.2016) அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் அமைப்பின் தலைவர் வெள்ளையன் தெரிவிப்பார். எங்கள் அமைப்பில், 10 லட்சம் வணிகர்கள் இருக்கிறார்கள்.அதனால் எங்களின் முடிவு அரசியல் கட்சிகளுக்கு  மிக முக்கியமானது"  என்றார்.

இதே கேள்வியை  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜாவிடம் முன்வைத்தபோது, " கோவில்பட்டியில் 100 ஏக்கரில் மாநாடு ஏற்பாடுகள் செய்து இருக்கிறோம். இது தேர்தல் நேரம், என்பதால் எங்களின் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்  கொள்ளும் அரசியல் கூட்டணிக்குத்தான் எங்களின் ஆதரவு இருக்கும். ஏனெனில் கடந்த நான்கரை ஆண்டுகளாக வணிக வரித்துறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் எங்களின் கோரிக்கைகளை ஏற்கும்  கூட்டணிக்கே ஆதரவு.
அதே நேரத்தில் நாளை (04.05.2016) கோவில்பட்டியில்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுத்து, தேர்தல் நிலைப்பாட்டை அறிவிப்போம். தமிழகம் முழுக்க எங்கள்  அமைப்பினர் 21 லட்சம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் கடைகளுக்கு வியாபார நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாக்கு அளிக்கும் கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது போல 100% தவறாமல் வாக்களிப்போம் என்ற இலக்கை எட்ட வணிகர்கள் விழிப்புணர்வில் இறங்கியுள்ளோம்' என்று பதிலளித்தார்.
ஆக வணிகர் சங்கங்கள் திமுக, அதிமுகவுக்கு எதிராக உள்ளது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் இரு அமைப்புகளும் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப்போகிறது என்பதை அனைத்துக்கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன.

ad

ad