புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!

மிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி.

திரைப்பட நடிகையாக தன் வாழ்க்கையை துவக்கிய ஜெயலலிதா, பின்னாளில் தமிழக முதல்வராகவும் இந்திய அளவில் அசைக்க முடியாத ஒரு அரசியல்வாதியாகவும் உருவெடுப்பார் என அந்த காலத்தில் அவரிடமே யாராவது சொல்லியிருந்தால் பலமாக சிரித்திருப்பார். ஆனால் அதுதான் நடந்தது பின்னாளில். ஆனால் அதற்குரிய தகுதி இருந்தது அவரிடம். 

எம்.ஜி.ஆரின் திரைப்பட கதாநாயகி என்ற அந்தஸ்து நழுவிப்போன பின்னர்,  திரையுலகில் இருந்து விலகி இருந்த நேரத்தில் அவரது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. அவரது ஆசான் எம்.ஜி.ஆர்தான் அரசியலுக்கு அவரை அழைத்துவந்தவர். அன்றுமுதல் இன்றுவரை தமிழக அரசியலில் அப்புறப்படுத்தப்பட முடியாதவராக இன்றும் அபரித செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக திகழ்கிறார். அதை விட முக்கிய விஷயம், அரசியல் களத்தில் அவருக்கு நேர்நிற்கும் தலைவர் அவருக்கு முந்தைய காலத்து வெற்றிகரமான அரசியல்வாதி. முள்ளின்மேல் படுக்கை போல அரசியல் களம் அவ்வளவு எளிதானதல்ல. தன் குருவின் எதிரியாக வர்ணிக்கப்பட்டவரை தனது எதிரியாக வரித்துக்கொண்டு. இன்றளவும் அரசியல் செய்வதே அரசியல்வாதியாக அல்ல; ஒரு பெண்ணாகவே பெரும் சாதனைதான். 

ஒரு பெண்ணாக அரசியல் களத்தில் அவர் சந்தித்த சோதனைகள் பலப்பல. தன் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்த சமயம், அவர் அத்தனை பிரபல நட்சத்திரமாக இல்லை. மக்கள் கவர்ச்சி மிக்க  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ஒரு நடிகையாக கட்சிக்கு அழைத்திருக்கமுடியாது. தேர்ந்த அறிவும்,  தெளிவான மற்றும் உறுதியான அவரது குணமும் எம்.ஜி.ஆரை ஈர்த்திருக்கலாம். எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1981-ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்த ஜெயலலிதாவை, அதே ஆண்டு ஜனவரியில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கினார் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதாவின் சட்டமன்றப் பணி
கட்சியின் கவர்ச்சிப்பேச்சாளர், சத்துணவு திட்டத்திற்கான உயர்மட்டக் குழு உறுப்பினர் என கிடுகிடு வளர்ச்சியடைந்த ஜெயலலிதா, 1984-ம் ஆண்டு  மாநிலங்களவை உறுப்பினராக, முதன்முறையாக அரசியல் அதிகாரம் பெற்றார். மாநிலங்களவையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை,  60 களில் அண்ணா அமர்ந்த இருக்கை. எம்.ஜி.ஆரின் ஆதரவு இருந்தாலும், கட்சிக்குள் மூத்த தலைவர்கள் சிலரின் எதிர்ப்புக்கிடையில் அவர் செயல்பட நேர்ந்தது. எம்.ஜி.ஆரின் நம்பிக்கை வட்டாரத்தில் அவர் இருந்தாலும்,  தனக்கான இடத்தை தக்கவைப்பதில்  பல இன்னல்களை சந்தித்து,  அவர் வெற்றி கண்டார். தனக்கான ஒரு வட்டத்தையும் அவர் சாதுர்யமாக உருவாக்கிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது,  எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி தலைமையில் (ஜா அணி) ஒரு அணியும் ஜெயலலிதா (ஜெ அணி) தலைமையில் மற்றொரு அணியும் தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்தின.
இந்த சூழ்நிலையில்,  1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி,  சேவல் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதிமுக ஜா, அதிமுக ஜெ,  காங்கிரஸ், திமுக என 4 முனைப் போட்டி நிலவிய அந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை  பெற்றது அதிமுக. அதிமுக ஆதரவு ஓட்டுக்கள் பிரிந்தது, குழப்பமான அரசியல் சூழல் இவை இத்தேர்தலில் திமுக வெற்றிக்கு காரணமாகின. 

அதிர்ஷ்டவசமாக இந்த காலத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தன. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1991 சட்டமன்ற தேர்தல்
1991 -ம் வருட சட்டமன்ற தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி கண்டது. ஜெயலலிதா இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஜெயலலிதாவின் தீவிர பிரசாரமும் ராஜீவ் காந்தி மரணத்தினால் எழுந்த அனுதாப அலையும் அதிமுக அணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்தது. அதிமுக கூட்டணி 225 தொகுதிகளை வென்று முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அந்த வகையில் ஜெயலலிதாவை முதல்வராக்கிய முதல் தொகுதி(கள்) பர்கூர் மற்றும் காங்கேயம். பர்கூர் தொகுதியில் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட திமுகவேட்பாளரை விட 33291 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ஜெயலலிதா.
1996 சட்டமன்ற தேர்தல்
1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெ போட்டியிட்ட தொகுதி பர்கூர்.  இந்த தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள், பழிவாங்கும் நடவடிக்கைகள், வளர்ப்பு மகன் திருமணம் போன்றவை மக்களிடையே ஏற்படுத்தியிருந்த அதிருப்தி போன்றவை அதிமுக மண்ணைக்கவ்வ காரணமாகின.
4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் படுதோல்வி அடைந்தார் ஜெயலலிதா.  அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியைத் தேடித் தந்த தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் நடந்த (1998-ம் ஆண்டு) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது.  அதிமுக மட்டுமே 18 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவிற்கு ஆறுதலாக இது அமைந்தது.
2001 சட்டமன்ற தேர்தல்
2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க மற்றும் சிறுபான்மை கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி கண்டது. முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட டான்சி நில வழக்கில் அவருக்கும் அவரது தோழி சசிகலாவுக்கும் தலா 2 ஆண்டுகள் தண்டனை தரப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் நிற்க தடை இருந்தது. ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அரசியலில் இது தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக மேலும் இரு இடங்களில் (புதுக்கோட்டை, புவனகிரி) மனு செய்தார். ஆனால் இந்த 4 இடங்களிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  அரசியல் களம் அதகளப்பட்ட நேரம் அது.
தமது ஆட்சி மீது பெரிய அளவிலான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்ற தெம்பில் கூட்டணி அமைப்பதில் கருணாநிதி கோட்டைவிட, கடைசியில் ஜாதிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட  திமுக,  படுதோல்வியை சந்தித்தது இந்த தேர்தலில். 197 இடங்களை வென்று அமோக வெற்றியுடன்  ஆட்சிக் கட்டிலிலில் அமர்ந்தது அதிமுக. ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ஜெயலலிதா பதவியேற்க,  டான்சி வழக்கின் தீர்ப்பு பெரும் தடையாக இருந்தது. டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் முதல்வராக பதவியேற்க சட்டம் இடம்கொடுக்குமா என விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,  ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆனால் பதவி ஏற்றதை எதிர்த்து திமுக தொடுத்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது' என, 2001 செப்டம்பர் 21 ம் தேதி தீர்ப்பளித்தது. அதனால், ஜெயலலிதா உடனடியாக பதவி விலகினார். 
அப்போதுதான் முதன்முறை எம்.எல்.ஏ  ஆகி,  சட்டமன்றத்தை  முழுவதுமாக ஒருமுறை கூட சுற்றிப்பார்த்திடாத ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வரானார். கட்சியினர் கண்ணீர்  விட்டபடி காலம் நகர்ந்தது. இதனிடையே டான்சி மேல்முறையீடு வழக்கில் விடுதலையானதை தொடர்ந்து,  ஆண்டிப்பட்டியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று  2002-ம் ஆண்டும் மார்ச் 2-ம் தேதி மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஜெயலலிதா.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் அந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. காங்கிரஸ் பா.ம.க,  இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக களத்தில் நின்றது. புதிதாக விஜயகாந்த் தலைமையில் உருவாகியிருந்த தேமுதிக,  முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 69 இடங்களே கிடைத்தது. திமுக கூட்டணி 163 இடங்களை வென்றது. திமுக ஆட்சியமைத்தது.
2001 ல் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே எதிர்கட்சித் தலைவர் கருணாநிதியை கைது செய்தது,  42 மாதத்தில் 24 முறை அமைச்சரவையை மாற்றியது,கோயில்களில் ஆடு கோழி பலியிடத் தடை விதித்தது,போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறை வீடு புகுந்த தாக்கியது, அடக்குமுறை, கண்ணகி சிலை அகற்றம், பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டது போன்ற காரணங்கள் அதிமுகவுக்கு மக்கள் ஓய்வுகொடுக்க காரணங்களாக அமைந்தன.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே காத்திருந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் 12 இடங்களையும், திமுக கூட்டணி 27 இடங்களையும் கைப்பற்றியது.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்,  ஜெயலலிதாவிற்கு மறக்கமுடியாத தேர்தல். மக்களிடையே  எழுச்சி பெற்றிருந்த விஜயகாந்தின் தேமுதிகவுடன், இந்த தேர்தலில் கூட்டணி கண்டார் ஜெயலலிதா. இதுதவிர  இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு பிளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற சிறியதும் பெரியதுமான கட்சிகள் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்தன. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார் ஜெயலலிதா. திமுக வேட்பாளரை விட சுமார் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றிபெற்றார்.
2ஜி ஊழல் பிரசாரத்தினால் எழுந்த எதிர்ப்பு அலை, இலங்கை தமிழர் பிரச்னையில் திமுகவின் தமிழர் விரோத நிலைப்பாடு, ஆற்று மணல், கிரானைட் குவாரிகள் என கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம், அதிகப்படியான விலைவாசி உயர்வு, தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, திரையுலகை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த கருணாதியின் உறவினர்களால் எழுந்த அதிருப்தி போன்றவற்றால் இந்த முறை ஜெயலலிதா எளிதாக வெற்றிபெறமுடிந்தது.
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்கள் கிடைத்தன. அதிமுக மட்டுமே 150 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைத்தது. 2011-ம் ஆண்டு மே மாதம் 4-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 
சொத்துக் குவிப்பு வழக்கில் எதிர்பாராதவிதமாக 2014-ம் ஆண்டு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையால், ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் 2015 ல் மே மாதம் தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆர்.கே நகர் தொகுதிக்கு நடந்த  இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வானார். ஜெயலலிதா  பெற்ற வாக்குகள் 1,60,432.
பரபரப்பான 2016 தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றி, அரசியல் நோக்கர்களாலும் வியக்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு அவர் பெற்ற வாக்குகள் 97218. திமுக வேட்பாளரைவிட  39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். கூட்டணி என்று சொல்லப்பட்டாலும் அதிமுகவுடன் உறவு கொண்ட ஓரிரு கட்சிகள் மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகளல்ல. கோபுர கலசங்களாக இருந்தாலும் அவை கோயிலை தாங்குவதில்லை. இந்த வகையில் பார்த்தால் போட்டியிட்ட 232 தொகுதிகளில் 134 இடங்களில் ஜெயலலிதா பெற்ற வெற்றி, அவரது தனித்த வெற்றியாகவே கருதப்படவேண்டும். ஆனால் இந்த வெற்றி, கட்சி ரீதியாக வெற்றியல்ல...கடந்த முறை பெற்ற இடங்களில் பலவற்றை திமுகவிடம் தாரை வார்த்திருக்கிறது அதிமுக.
எந்த முறையும் இல்லாத வகையில் இம்முறை அவரது அமைச்சரவை சகாக்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து நின்றன. இதில் ஒழுக்கக்கேடான குற்றங்களும் அடக்கம். தேர்தலுக்கு முன்தினம் வரை, தேர்தலையே நிறுத்திவைக்கும் அளவுக்கு வலுவான குற்றச்சாட்டுக்கள் அதிமுக மீதும் ஜெயலலிதா மீதும் வைக்கப்பட்டன. அத்தனை அஸ்திரங்களையும் மீறி அவர் மீண்டும் அதிமுகவை வென்றெடுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது பதில் மவுனமாகவே இருந்தது. தேர்தலின் வெற்றி மட்டுமே அந்த மவுனத்தை உடைத்தது. 'மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி' என்றிருக்கிறார்.
உண்மையில் இந்த வெற்றியை முந்தைய சட்டமன்ற செயல்பாடுகளைப்போல ஜெயலலிதா கடந்து சென்றுவிடமுடியாது.  இம்முறை இதுவரையில்லாத வகையில், அதிகபட்ச எண்ணிக்கையில் திமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. திமுக என்ற யானையையும் அதன் அனுபவம் மிக்க கருணாநிதி என்ற பாகனையும் சமாளிப்பது ஒன்றே சட்டமன்ற வரலாற்றிலும் ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திலும் இதுவரையில்லாத கடினமான ஓர் பணியாக இருக்கும்.
சமாளிப்பாரா ஜெயலலிதா?

ad

ad