புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2016

சென்னையில் வாக்குப் பதிவு சரிவு ஏன்? அதிர்ச்சியளிக்கும் 'திடுக்' தகவல்!

டந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில், சென்னையில்  முன்பு எப்போதும் இல்லாத அளவில் வாக்குப் பதிவு  குறைந்திருப்பது
பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், "வாக்குப் பதிவு குறைவுக்கான காரணத்தை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும்" என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி இன்று அளித்த பேட்டியில், ''சென்னை உள்பட நகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப் பதிவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்வோம்.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சமூக ஊடகங்கள் மூலமாக தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.13.50 லட்சம் செலவிடப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  விழிப்பு உணர்வு பிரசாரத்துக்கு  ஆன செலவினம் மட்டும் ரூ.35 லட்சம் ஆகும்.

கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு 73 சதவீதம் அளவுக்கு இருந்தது. இப்போதும் அதே அளவை எட்டியுள்ளது. கடந்த தேர்தலின் போது வாக்காளர்கள் 5.5 கோடி இருந்தனர். இப்போது  அது 30 லட்சம் அதிகரித்து, 5 கோடியே 77 லட்சத்து, 33 ஆயிரத்து, 574  வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாக்குப் பதிவு சதவீதம் குறையும்" என்றார் லக்கானி. 

சென்னையில் பதிவு விபரம்

சென்னையில் அதிகபட்சமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலும், குறைந்தபட்சமாக மயிலாப்பூர் தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராதாகிருஷ்ணன் நகர் 67%, மயிலாப்பூர் 55.2%, பெரம்பூர் 65%, கொளத்தூர் 64.4%, வில்லிவாக்கம் 58%, திரு.விக.நகர் (தனி) 63.03%, எழும்பூர் (தனி) 62.5%, ராயபுரம் 62.6%, துறைமுகம் 55.27%, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 62%, ஆயிரம் விளக்கு 59.93%, அண்ணா நகர் 60.87%, விருகம்பாக்கம் 57.9%, சைதாப்பேட்டை 58.18%, தியாகராயநகர் 58%, மயிலாப்பூர் -55.2%, வேளச்சேரி - 57.7%  என வாக்குகள் பதிவாகி உள்ளன. 

தமிழகத்தில் பதிவானது எவ்வளவு?

தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 74.26  என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று மதியம் அறிவித்துள்ளது. 5.5 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.8 கோடியாகியுள்ளது. ஆனாலும், சென்னையில்தான் குறைந்தபட்சமாக 60.47 சதவீதம் வாக்குப் பதிவு இருந்துள்ளது.

அடுத்தடுத்த விடுமுறை காரணமா?

சென்னையில் மக்கள் தொகையானது நெரிசல் மிகுந்த கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களை மிஞ்சிக் கொண்டு வருவது யதார்த்த நிலை என்றாலும், வாக்களிப்பில் அந்த யதார்த்தம் பொய்த்திருக்கிறது.

பணி முடித்து வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்புகிறவர்கள் அடுத்தடுத்து வந்த சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களோடு வாக்களிப்புக்காக, திங்கட்கிழமை (16.5.2016) அன்று விடப்பட்ட  அரசு விடுமுறை நாளையும் மொத்தமாக சேகரித்து செலவிட்டுள்ளனர் என்பதையே இந்த தேர்தலின் வாக்கு சதவீதம் சொல்லியிருக்கிறது.

அதே வேளையில் சென்னையில் மட்டும்தான் அந்த அடுத்தடுத்த விடுமுறை விவகாரம் எடுபட்டிருக்கிறது. பிற மாவட்டங்களில் வாக்கு சதவீதம் நிறைவாக இருந்துள்ளது.

வாக்குப்பதிவு சரிவு ஏன்?

சென்னையில் வாக்குப் பதிவு குறைய என்ன காரணம்? சென்னையை பூர்வீக குடியாய்க் கொண்டவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பின் நிமித்தம் அயல் நாடுகளில் உள்ளனர். அதே சமயம், சென்னையில் பொருளீட்டவும்,  வணிகம் உள்ளிட்ட பிற விஷயங்களுக்காகவும் வந்தவர்களின் வாக்குகள் அவரவர் சொந்த ஊரிலேயே செலுத்தப்பட்டுள்ளன. 

இரட்டை வாக்குரிமையும், அதிகரித்த வாக்காளர்களும்

தேர்தல், வாக்காளர்கள் குறித்து ஆர்.டி.ஐ.யில் தொடர்ந்து மல்லுகட்டிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர், ஐ.எஃப். அருள்ராயிடம்,  'வாக்காளர்கள் அதிகம், வாக்கு சதவீதம் குறைவு... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?' எனக் கேட்டேன்.

"சொந்த ஊரில் வோட்டர் ஐ.டி.யைப் பெற்றுள்ள ஒரு நபர், சென்னை போன்ற பிற ஊர்களில் தங்கி வாழும் போது தன்னுடைய அடிப்படை உரிமையாகவும், முகவரிக்கான ஒரே ஆவணமாகவும் வாழ்கிற இடத்திலும் ஒரு வோட்டர் ஐ.டி.யை வாங்கிக் கொள்கிறார். அதை வாங்குவதும் அத்தனை சிரமமான ஒன்றல்ல.

ஒரே நபருக்கு இந்த வகையில் இரண்டு வோட்டர் ஐ.டி, இருக்கிறது என்றால், இரண்டரை கோடி வாக்காளர்கள் கையில் 5 கோடி வோட்டர் ஐ.டி.க்கள் இருக்கிறது என்பதுதானே கணக்கு? பிறகு எப்படி வாக்கு சதவீதம் எகிறும் ?

ஊரில் இருந்து ரேசன் கார்டில் பெயரை நீக்கிய சான்றைக் காட்டிய பின்னரே சென்னையில் மாற்று அல்லது புதிய ரேசன் கார்டை வாங்க முடியும்.

ஆனால்,  சொந்த ஊரில் இருக்கும், 'வோட்டர் ஐ.டி'யை  கேன்சல் செய்ததைக் காட்டினால்தான் இங்கு புதிய வோட்டர் ஐ.டி.யைக் கொடுப்போம் என்கிற ஸ்ட்ராங்க் சிஸ்டம் இதில் கடைபிடிக்கப்படுவதில்லை.

டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேசன் கார்டு போன்றவற்றை ஆவணமாகக் காட்டி சென்னையிலும் புதிய வோட்டர் ஐ.டி.யை வாங்குகிறவர்களால், வோட்டர் ஐ.டி, வங்கி பாஸ்புக்கை காட்டி புதிய ரேசன் கார்டை வாங்க முடியாது. உணவுத் துறை அமைச்சரே மனது வைத்தாலும் நடக்காது. அந்த ஒரு துறையின் சிஸ்டம் மட்டும் அப்படி.

போலீஸ் ஸ்டேஷனில் ஒருவரை சொந்த ஜாமீனில் விடுவதற்கு ஆதார் அட்டை, வோட்டர் ஐ.டி, வங்கி பாஸ்புக் என்று எதைக் காட்டினாலும் ஏட்டய்யா அதை ஏற்க மாட்டார். அவருக்குத் தேவை ஒரே ஒரு ரேசன் கார்டு. அதில் ஜாமீன் பெறுகிறவர் பெயர் இருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக மாறாமல் இருந்து கொண்டிருக்கும் நடைமுறை" என்கிறார் அருள்ராய்.

முரண்படுகிறதா ஆணையம்?

'வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக வாக்குப் பதிவு சதவீதம் குறையும்' என்று தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, இன்றைய பேட்டியில் சொல்லியிருப்பது இந்த கணக்கில் பார்த்தால் அப்பட்டமான முரண்தான். ஏனெனில்,  வாக்காளர் எண்ணிக்கை கூடுதலுக்கும் குறைவுக்கும், வாக்குப் பதிவுக்கும் எந்த சதவீத தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

1967 முதல் 2016 வரையில் சதவீதக் கணக்கு

1967 ல் 57 சதவீத வாக்குப் பதிவானது. அப்போது தி.மு.க வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து நடந்த தேர்தலில் பதிவான வாக்கு  சதவீதம் வருமாறு: 

1971 - 72.10%, 1977 - 61.58%, 1980 - 65.42%, 1984 - 73.47%, 1989 - 69.69 %, 1991 - 63.84%, 1996 - 66.95, 2001 - 59.07%, 2006 - 70.56%.

2011-ல்தான் அதிகபட்சமாக 77.81 சதவீத வாக்குப் பதிவானது. 2016-ல் (இப்போது) 74.26 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.

1967-ல் தொடங்கி 2016 வரையிலான தமிழக சட்டமன்றத் தேர்தல்களில்,  அதிகபட்சமாக, 77.81 சதவீத வாக்குகளை கைப்பற்றி,  2011-ல் அ.தி.மு.க, ஆட்சியை கைப்பற்றியது. அதற்கடுத்த நிலையில், அதிக வாக்கு சதவீதத்தை (74.26%) இந்த 2016-ல் நடந்த தேர்தலில்தான் மக்கள் வழங்கியுள்ளனர்.

குப்பைக்குப் போன வோட்டர் ஐ.டி.கள்

தேர்தல் ஆணையத்தின் வெளியில் தெரியாத சில முகங்களிடம் பேசியபோது, "எல்லாமே ஏதோ சத்தியத்துக்கு கட்டுப்பட்டது போல  போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வோட்டர் ஐ.டி.க்களை மொத்தமாக கொண்டுவந்து ஒரு கும்பல் குப்பையில் கொட்டி விட்டுப் போனதை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சுமார் 2 ஆயிரம் ஐ.டி.கார்டுகள் அங்கே கிடந்தன. அந்த கார்டுகள் இப்போது எங்கே? அந்த கார்டில் பெயர் உள்ளவர்கள் வாக்களித்தார்களா? அவை டபுள் என்ட்ரி கார்டுகளா...? இப்படி  பல கேள்விகள் விடையில்லாமலே தூங்குகின்றன" என்கின்றனர்
.

ad

ad