புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் தமிழிசை சௌந்திரராஜன்

 இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு
செய்திருக்கிறேன் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.
பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற தலித் வீட்டில் சாப்பிட்டார்.
இதுப்பற்றி ஜீவானந்தம் கூறும்போது, ''நான் பா.ஜ.க.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் மனைவி ராஜேஸ்வரி மாவட்ட செயலாளராக இருக்கிறார். நாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். சேலம் மாவட்ட செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் தான் எங்களை பா.ஜ.க.,வில் சேர்த்தார். அதன் பிறகு நாங்கள் கட்சியில் ஆர்வமாக பணியாற்றினோம். என் மனைவி ராஜேஸ்வரின் சின்ன வயதிலேயே மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்திருக்கிறார். தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. 

எங்க மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று சேலத்தில் நடைப்பெற்ற செயலவீரர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார். நானும் அந்த கூட்டத்திற்கு சென்றேன். என் வீட்டிற்கு வந்து சாப்பிடுவார் என கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. வீட்டிற்கு வருவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தான் சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்தோம். சரி வீட்டிற்கு வந்து டீ, காபி சாப்பிட்டுவிட்டு சென்று விடுவார் என்று நினைத்தோம். அதனால் எதுவும் செய்யவில்லை. பிஸ்கெட் மட்டும் வாங்கி வைத்திருந்தோம்.
மாலை 6 மணிக்கு கட்சிக்காரர்கள் புடை சூழ என் வீட்டிற்கு வந்தார் தமிழிசை சௌந்திரராஜன். என் வீட்டில் அமர்ந்து என் குழந்தைகளை கொஞ்சினார். என்ன சமையல் செய்திருக்கீங்க. எனக்கு பசியா இருக்கு, சாப்பிடனுமுன்னு சொன்னாங்க. கையும் ஓடல, காலும் ஓடல, அம்மா நீங்க எங்க வீட்டிலெல்லாம் சாப்பிட மாட்டீங்கன்னு எதுவும் செய்யவில்லை என்றேன்.

யார் சொன்னது நான் சாப்பிட மாட்டேன் என்று அதுவும் போக, நீங்க நம்ம கட்சிக்காரங்க. ஒரே குடும்பம் மாதிரி. என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது. பசிக்கிறது. சாப்பாடு கொண்டு வாங்கன்னு சொன்னாங்க. அதன் பிறகு பழைய மாவு இருந்தது. அதில் இட்லி சுட்டு 3 இட்லி, 1 தோசை அதற்கு சட்னி, சாம்பார் வைத்து கொடுத்தோம். பொறுமையா இருந்து நல்லா சாப்பிட்டுட்டு போனாங்க. இதை எங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்" என்றார். 

அந்த வீட்டிற்கு அருகில் உள்ள தி.மு.க.வை சேர்ந்த செங்கோடன் என்பவர் கூறும்போது, ''தலித் வீடுகளில் சாப்பிட்டால் சாதி ஒழிந்து விடுமா? யாரை ஏமாற்றுகிறார்கள். பா.ஜ.க. மீது படிந்துள்ள மத, சாதி அடையாளங்களை மறைப்பதற்காக இந்த மோடி வித்தையை செய்கிறார்கள்.
இதை பார்க்கும்போது, நேற்று இன்று நாளை படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.,, 'தெரு தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு.... ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு" என்று பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. தலித் வீட்டில் சாப்பிடுகிறவர்கள் ஏன் கட்சிக்காரர் தலித் வீட்டில் சாப்பிட வேண்டும்.

உண்மையிலேயே தலித் மக்கள் மீது அக்கறை இந்தால், அவர்கள் வீட்டில் இவர்கள் சம்மந்தம் செய்வார்களா? காதல் திருமணத்திற்கு ஏன் எதிராக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. உண்மையில் சமத்துவத்தை பா.ஜ.க., ஆதரிக்கிறது என்றால் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றலாமே?
தலித் மக்கள் அனைத்து கோவில்களிலும் நுழைவதற்கு ஏற்பாடு செய்யலாமே? பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியா முழுவதும் தலித் மீது வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மோடி வித்தையெல்லாம் வட இந்தியாவில் வேண்டுமென்றால் பலிக்கும். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பலிக்காது" என்றார்.
இதுப்பற்றி தமிழிசை சௌந்திரராஜன் கூறும்போது, ''நான் தலித் வீடுகளில் சாப்பிடுவது ஆரம்ப காலம் முதலே கடைபிடித்து வருகிறேன். எங்க தேசியத் தலைவர் அமித்ஷா அறிவிப்பு எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்து இருக்கிறது. இப்படி ஒரு தலித் வீட்டில் சாப்பிடும்போது தான் அந்த வீட்டில் மட்டுமல்ல, அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் அறிய முடிகிறது. அவர்களோடு ஒன்றி பழகும்போது தான் அவர்களின் கஸ்டங்கள் உணர முடிகிறது.

தலித் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாரத பிரதமர் மோடி மிகுந்த அக்கறை உடையவராக இருக்கிறார். அவர்களுக்காக பல திட்டங்களை வகுத்திருக்கிறார். இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதை என் வாழ்நாள் முழுக்க கடைபிடிப்பேன்" என்றார்.

ad

ad