புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

கோட்டையில் நடக்கும் 'சீட்' பஞ்சாயத்து... தனியாகத் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் பணியும் முடிந்து கூட இன்னும்
முடியாமல்  இருப்பது, கோட்டையில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கான  அறை ஒதுக்கும் பஞ்சாயத்து.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் யாரும் உறுப்பினர்கள் இல்லாததால், கோட்டையில்  அவர்களுக்கான அறையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து, எம்.எல்.ஏ.க்களுக்கு  'பயணப்படி' வழங்கும்  பில் செக்‌ஷனாக அதனை மாற்றி விட்டனர். அதற்கான பிரத்யேக அதிகாரியாக ரமேஷ் என்பவர் அங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையோடு கோட்டைக்குள் நுழைந்த திமுக, இந்த முறை 89 எம்.எல்.ஏ.க்களுடன் நுழைந்திருப்பதால், தங்களுக்கான அறையை பெரிதாக மாற்றித் தருமாறு கோரிக்கை வைத்தது. திமுகவின் கோரிக்கையை ஏற்ற ஆளும் அதிமுக, தேமுதிகவுக்கும், காங்கிரசுக்கும் கொடுத்திருந்த அறைகளை ஒன்றாக இணைத்து அதை ஒரே அறையாக்கி திமுகவுக்கு கொடுத்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர, திமுகவின் கடந்த கால அறையை காங்கிரசுக்கு ஒதுக்கியது ஆளும்கட்சி நிர்வாகம். ஆனால், ' நாங்கள் அன்று 23 பேர், இன்று 89 பேர். இந்த இடம் 50 பேர்  அமருகிற அளவில் கூட இல்லை' என்று குற்றஞ்சாட்டி புதிய இடத்தை நிராகரித்த திமுக, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்திய அதே இடத்தை மீண்டும் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆக, இப்போது திமுக பயன்படுத்திக் கொண்டிருப்பது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட இடம். திமுக அங்கிருந்து கிளம்பாதவரையில், வேறு இடம் இல்லாத நிலையில் , பொதுவான சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு அறையில் தற்போது காங்கிரஸ்  இருக்கிறது.
இது போக, 'திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய இருக்கை ஒதுக்கித் தரப்படவில்லை' என்று திமுகவும், 'நாங்கள் எதிர்க் கட்சித் தலைவருக்குத்தான் உரிய இருக்கையை ஒதுக்கித் தரமுடியும். திமுகவின் 89 உறுப்பினர்களில் கருணாநிதியும் ஒருவர்தான். உறுப்பினர்களுக்கெல்லாம் விசேஷ இருக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்க முடியாது'  என்று அதிமுகவும் மாறி மாறி  நாற்காலி தொடர்பான பதில்களில் மூழ்கியுள்ளன.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அறைகளை ஒதுக்குவதிலும், கருணாநிதிக்கு நாற்காலி ஒதுக்குவதிலும் குழப்பம், குளறுபடிகள் ஒரு புறம் இருக்க, சில பத்திரிகையாளர்களை, காட்சி ஊடகங்களின் செய்தியாளர்களை தரை  தளத்தில் இருந்து மாடத்துக்கு மாற்றி அனுப்பி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் தனியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும்  டுவிஸ்ட்டுக்குள் டுவிஸ்ட்டாக 'முரசொலி' க்கு மட்டும் தரைத்தளம் எப்படி கொடுக்கப்பட்டது  என்ற கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது.
நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள், வெகு விரைவில்  தொகுதி பிரச்சினைகள் குறித்து  பேசக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருந்து விடப்போகிறது

ad

ad