புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூதாட்டிகள்,
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினார்கள்.
தமிழக சட்டமன்றத்திற்கு என்னை (ஜெயலலிதா) தேர்ந்தெடுத்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி (ஆர்.கே.நகர் தொகுதி) மக்கள் தங்களது குறைகளை எளிதில் எனது (முதல்-அமைச்சர்) கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ஒரு சிறப்பு வழிமுறையை கடைபிடிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவின் தனி அலுவலர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுவதும் அங்கேயே இருந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.
அந்த மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக முதல்-அமைச்சரின் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குறைதீர்க்கும் முதல் சிறப்பு முகாம் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பொதுமக்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களை பெற முதல்-அமைச்சர் தனிபிரிவு சிறப்பு அலுவலர் ஜெ.கணேஷ் கண்ணா நியமிக்கப்பட்டிருந்தார். இவருடன் சென்னை கலெக்டர் கு.கோவிந்தராஜூம் கலந்து கொண்டார்.
இவர்களுடன் வருவாய்த்துறை, மாநகராட்சி மண்டல அலுவலர், குடிசை மாற்றுவாரியம், மீன்வளத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், காவல் துறை, பெருநகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், தாட்கோ, சுகாதாரத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தொழில் வணிகத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய குறைதீர்க்கும் முகாமில் மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டதாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களை வரவேற்கும் வகையில் அலுவலக வளாகத்தில் வாழை மரம் மற்றும் தோரணங்களுடன் பந்தல் போடப்பட்டு இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன. மனுக்கள் அளிக்க வந்தவர்களை பந்தலில் அமரவைத்து பெயர், முகவரி பதிவு செய்யப்பட்டு ‘டோக்கன்’ வழங்கப்பட்டது.
அதன்படி அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, விவரங்களை எடுத்து கூறினார்கள். கனிவாக கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிபிரிவு சிறப்பு அலுவலர் ஜெ.கணேஷ்கண்ணா கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து மனுக்களை அளித்தனர்.
குறிப்பாக முதியோர் உதவித்தொகை, பட்டா, வீடு, கணவர் இறப்பு சான்று, ஆதரவற்ற விதவை சான்று, ரேஷன்கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. இவர்களுடைய மனுக்கள் முறையாக முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறைதீர்க்கும் மனு அளித்த சங்கீதா என்பவர் கூறும் போது, ‘பி.எஸ்சி, பட்டதாரியான நான், கலப்பு திருமணம் செய்து உள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தேன்.
சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அழைத்து உள்ளனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். அது எனக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது’ என்றார்.
கணவனை இழந்த சுதா என்பவர் கூறும் போது, ‘கணவனை இழந்த நான் 2 குழந்தைகளை, வீட்டுவேலை செய்து காப்பாற்றி வருகிறேன். எனக்கு ஆதரவற்ற விதவை சான்று கேட்டு பலமுறை மனு செய்தும் கிடைக்கவில்லை.
தற்போது முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடக்கும் இந்த முகாமில் மனு அளித்து உள்ளேன். இப்போதாவது எனக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும். முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஊனமுற்ற மனோகரன் என்பவர் அளித்த மனுவில் தனக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரி கோரிக்கை மனு அளித்தார். அதேபோல் கோவிந்தசாமி என்ற ஊனமுற்றவர் கூறும் போது, ‘வீடு இல்லாமல் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
பல முறை வீடு வழங்க கோரி மனு அளித்தேன். எந்த பதிலும் இல்லை. ஆனால் தற்போது அளித்த மனு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். நம்பிக்கையுடன் செல்கிறேன்’ என்றார்.

ad

ad