புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2016

அன்று அணி... இன்று கிலி... கோட்டையில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட நாட்களில்,  முதல்வர்
ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று கருதி, திமுக தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தலைமைச் செயலக அதிகாரிகளில் சிலர் ஒரு அணியாகத் திரண்டு சென்று சந்தித்த விவகாரம் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தேர்தலுக்கு முன்பிருந்தே பல்வேறு கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக தலைமையில்தான் ஆட்சி அமைய உள்ளது என்றும், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறாது என்றும் கூறி செய்திகள் வெளிவந்தன. அதே போல உளவுத்துறை அறிக்கையும் ஊடகங்களின் கருத்துக்கணிப்பை ஒட்டியே தயாரிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு வைக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனால்  தமிழகத்தின் பிரதான அதிகார மையமான தலைமைச் செயலகத்தில், செயலாளர்கள் தொடங்கி அலுவலக உதவியாளர்கள் வரையிலும் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற குழப்பம் நிலவியுள்ளது. 

அப்போது ஒருசில முக்கிய அதிகாரிகள் ஒன்று கூடி,  திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால்  முதல்வர் பதவியேற்பு நிகழ்வை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தலாம் என்றும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு யார் யார் அமர்த்தப்படவேண்டும் என்றும்   ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் சீரியஸான ஆலோசனைகள் பலகட்டமாக நடந்துள்ளன. இதில் மாசுக்கட்டுப்பட்டுத் துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுகாதாரத்துறை அதிகாரியும் பிரதான பங்கினை வகித்துள்ளனர். இவர்களோடு முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியும் அடக்கம் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியானதால்,நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடத்தலாம் என்று  ஏற்பாடுகளில் இறங்கிய அதிகாரிகள் தரப்பு அதிர்ச்சியடைந்தது. தொடர்ந்து என்ன செய்யலாம் என்றும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு, தற்போதைக்கு அமைதி காக்கவும் இந்த விஷயத்தை அப்படியே  மறைத்துவிடவும் முடிவு செய்தனர். 

ஆனால்,ஜெயலலிதா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராகப் பதவி ஏற்ற அன்றே அவரின் கவனத்திற்கு,ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அணிதிரட்டல் குறித்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முழுவதையும் கேட்ட முதல்வர் ஜெயலலிதா,யார் யார் அந்த அணியில் இருந்தார்கள் என்று விவரமாகக் கேட்டுள்ளார். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி, வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், முதல்வராகப் பதவி ஏற்ற அன்று தலைமைச் செயலகத்தில்  5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது தலைமைச் செயலாளர்தான் அருகில் இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக  முதல்வரின் செயலர் ராம்மோகன் ராவ் கோப்புகளை எடுத்துக்கொடுத்தார். இதைப் பார்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் , முதல்வர் ஜெயலலிதா நமக்கு மறைமுகமாக செய்தி கூறுகிறார் என்று புரிந்துகொண்டனர்.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த ஸ்கந்தன் தற்போது காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் காத்திருப்புப் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதே போல முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர் இன்னொசென்ட் திவ்யா விடுப்பில் சென்றுள்ளார். அவர் ஒருமாதம் முன்னமே விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்துள்ளார். அதே போல திடீரென்று ஜெயஸ்ரீ முரளிதரன், முதல்வரின்  முதல்வரின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் கவனித்து வரும் 'அணிதிரண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு' கலக்கத்தில் உள்ளது.  

மேலும், தமிழக தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்பதிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஜெயலலிதா தலைமையில் மீண்டும் புதிய அரசு  பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநிலத்தின் நிதி மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள்,புதிய திட்டங்கள் என்பன குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்த வேண்டும். இந்த நிலையில் கோட்டை அதிகாரிகள் மத்தியில் குழப்பங்கள் நிலவுவது பற்றி ஆங்காங்கே ரகசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் முக்கியத் துறைகளை பிடிப்பதிலும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. விரைவில் முதல்வர்  பிரதமரைச் சந்திக்கவுள்ளார். அதற்காக டெல்லி பயண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. முதல்வரின் டெல்லி பயணத்திற்கு முன்பாக கோட்டை குழப்பங்கள் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

ad

ad