புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

மணலி அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் திருப்பம்! - அரசியல் கட்சியின் மா. செ. தலைமறைவு

சென்னை மாநகராட்சியின் 21-வது வார்டு அ.தி.மு.க.
கவுன்சிலர் முல்லை ஆர். ஞானசேகர், கடந்த 9-ம் தேதியன்று, மணலி பஸ் நிலையம் அருகே உள்ள தனது நண்பர் கடை வாசலில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி, நகரின் முக்கிய பிரமுகர், மாஜி. கவுன்சிலர், ரியல் எஸ்டேட் புள்ளி என்று பல கோணங்களில் கொலையாளி குறித்த பின்னணி தகவல்கள் வந்து கொண்டே இருப்பதால் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை. கமிஷனர் ஜெயகுமார் தனித்தனியே டீம் அமைத்து புலனாய்வு செய்து வருகின்றனர்.

தேடப்படும் லிஸ்ட்டில் இருந்த விஜய் ஆனந்த், குதிரை வெங்கடேஷ், ரபீக் ஆகியோரில் குதிரை வெங்கடேஷ் மட்டும் பிடிபட்டுள்ளார். குதிரை வெங்கடேஷ் அளித்த வாக்குமூலத்தில், "வியாசர்பாடியில் வசிக்கும் கொளத்தூர் சோமு சொல்லித்தான் ஞானசேகரை வெட்டிக்கொலை செய்தோம்" என்று ஒற்றை வரியில் சொல்லி முடித்து விட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள விஜய் ஆனந்த், சோமு என்பவரிடம் கார் டிரைவராக இருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய கொளத்தூர் ரவுடியான சோமு (எ) சோமசுந்தரம்தான் இந்த சோமு என்பதால், கொலையின் பின்னணியில் கூலிப்படைகள் சம்மந்தப் பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

சிறையில் இருக்கும் சோமுவை போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்தால், விஜய் ஆனந்த் - சோமு பிணைப்பு குறித்த விவகாரம் வெளியாவதோடு, பட்டியலில் இருக்கும் மாஜி.கவுன்சிலர், ரியல் எஸ்டேட் புள்ளி, நகரின் முக்கிய பிரமுகர் குறித்த அடுத்தடுத்த விவகாரங்கள் பற்றியும் தகவல் கிடைக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

மணலி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த  விஜய் ஆனந்த், அரசியல் கட்சி ஒன்றில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர். போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இவருடைய செல்போன்களை ஆஃப் செய்து  விட்டு, கடந்த ஒரு வாரமாக ஓடிக் கொண்டே இருக்கிறார். அவருடைய தொடர்பு வட்டங்கள் அனைவரையும் போலீஸ் ரவுண்ட் செய்து விட்டதால், விஜய் ஆனந்த், இனியும் ஓடிக் கொண்டிருக்க முடியாது என்கிறார்கள் காவல்துறையினர்.

கொலை நடந்த அன்று, ஞானசேகரின் நண்பர் கடையில் இருந்த சிசிடிவி காமிரா பதிவில் சிக்கியுள்ள  6 பேரையும் மணலி போலீசார் கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள், 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் ஜெபக்குமார், ராஜேஷ், ராஜு, பிரபு, குமாரவேல், மாதவரம் முத்துராஜ், மணலி ராஜ்குமார் ஆகியோர் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள். அதனால் இந்தக்  கொலை வழக்கின் எதிரொலியாக மணலியில் அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

"கொன்னது நீங்கதான்னு தெரியும், கொல்லச் சொன்னது யாருன்னு சொல்லுங்க" என்ற போலீசாரின் கேள்விக்கு இதுவரையில் பிடிபட்ட ஆசாமிகளிடமிருந்து பதில் இல்லை என்பதே, கொலையின் பின்னணியை அச்சமூட்டும் விதமாகக் காட்டுகிறது

வடசென்னையின் புறநகர்ப் பகுதிகளான மணலி, எண்ணூர், திருவொற்றியூர்களில் தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இங்கிருக்கும் சில கம்பெனிகள் அரசியலில் பலம் பொருந்தியவர்களுக்கும், தாதாக்களுக்கும் கேட்டதை விட அதிகமாக 'வாரிக் கொட்டுகின்றன'.

கம்பெனிகள், தாதாக்கள், அரசியல் வாதிகள் என்ற மும்முனை பரிவர்த்தனை ஒரு புறம் இருக்க, அனைத்துக்குமான "மீடியேட்டர்" என்று நான்காவதாக ஒரு சக்தியும் இங்கே செயல்படுகிறது.

கொலை செய்யப்பட்ட முல்லை ஆர்.ஞானசேகர், மீடியேட்டர் என்ற நான்காவது இடத்தில் இருந்தவர் என்கிறது போலீஸ் தரப்பும், விபரம் அறிந்த உள்ளூர் தரப்பும். "ஞானசேகரனின் முப்பதாண்டு கால மீடியேட்டர் அனுபவத்தில் அவரை அனைவருக்குமே நன்கு தெரிந்துள்ளது. அவருடைய இடத்தைப் பிடித்து விட்டால், கைக்கு வருகிற பங்கு அனைத்துமே மூன்றுக்குள் அடங்கி விடும். பங்கினை நான்காவதாகப் பிரிக்க வேண்டியதில்லை என்ற காரணத்தால்தான், பல ஆண்டுகளாக திட்டமிட்டு நடந்திருக்கும் தொழில் ரீதியிலான கொலை இது. தனிப்பட்ட ஒரு ரவுடியோ, ஒரு அரசியல் வாதியோ மட்டும் இதில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை." என்கிறது விசாரணை வட்டாரங்கள்.

மணலி புதுநகரில் உள்ள சிலரிடம் பேசியதில், "போலீசாரின் 'ஹிட்' லிஸ்ட்டிலேயே இல்லாத ஆட்களெல்லாம் திடீரென கோர்ட்டுக்குப் போய் ஆஜராகி 'நாங்கள்தான் கொலை செய்தோம்' என்று வாக்குமூலம் கொடுக்கின்றனர். இதன் முழுமையான முடிச்சு அவிழ வேண்டுமென்றால், வழக்கை லோக்கல் போலீஸ் விசாரித்தால் போதாது, சிபிசிஐடி அளவில் விசாரிக்க வேண்டும். மேலும், அடுத்தடுத்து விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்து விடாதபடி மக்களைப்  பாதுகாக்க வேண்டும்" என்றனர்.

காவல் உயரதிகாரிகளிடம் கேட்ட போது, "ஞானசேகர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், 'கவுன்சிலர் முல்லை ஞானசேகர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது உறுதி' என்று குறிப்பிட்டிருந்தார். மாநிலத்தின் முதலமைச்சரே நேரடியாகக்  கருத்தில் கொண்டுள்ள ஒரு விவகாரம் என்பதால் முல்லை ஞானசேகர் கொலையில், உண்மைக் குற்றவாளிகள் சிக்க வேண்டும் என்பதில் எங்கள் போலீஸ் டீமில் உறுதியாய் இருக்கின்றனர். கோர்ட்டில்தான் ஆட்கள் சரணடைந்து விட்டனரே என்று இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது" என்கின்றனர்.

திருவொற்றியூர் மண்டலம், 6-வது வார்டு சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கும் அமல்ராஜ் என்கிற வின்சென்ட் தற்போது சென்னையில் இல்லை என்ற நிலையில், அவருடைய வீட்டிற்கே யாரோ சிலர் நேரில் சென்று நேற்றிரவு (15.7.2016 ) மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சாத்தாங்காடு போலீசில் அமல்ராஜின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

ad

ad