புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

கர்ப்பிணியை தாக்கிய போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது




திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31). இவர்களுக்கு முத்தமிழரசி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.  முத்தாம்பிகை திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வருகிறார். 2-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்தாம்பிகை திருப்பதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வருகிற 24-ந்தேதி பிரசவம் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்தால் அரசு உதவி வழங்கப்படுகிறது. ஒரு வேளை நமக்கும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அரசு உதவி கிடைக்குமே என்ற ஆசையில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற எண்ணி வந்தனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தமிழரசு தனது மகளுடன் வார்டுக்கு வெளியே அமர்ந்து இருந்தார். தாயை பிரிந்து தந்தையுடன் இருந்த குழந்தை அழுதது. எவ்வளவோ சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

குழந்தையின் அழுகை சத்தம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அவர்கள், குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி தமிழரசுவிடம் கூறினார்கள். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  வெளியே கணவரின் சத்தத்தை கேட்டு வார்டுக்குள் இருந்த முத்தாம்பிகை வெளியே வந்தார்.

போலீசாரிடம், குழந்தை அழுததற்காக ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பெண் போலீஸ் முத்தாம்பிகை கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் நிறைமாத கர்ப்பிணியான முத்தாம்பிகை அதிர்ந்து போனார்.

இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி விரைந்து சென்று சமாதானப்படுத்தினார். பெண் போலீசார் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்த சம்பவத்தால் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தயங்கிய முத்தாம்பிகை ஊருக்கு சென்று விடுவோம் என்று கூறினார். கணவனும் மனைவியும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த முத்தாம்பிகைக்கு பஸ்சில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. பனிக்குடமும் உடைந்தது.

அதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சை நிறுத்தி முத்தாம்பிகைக்கு உதவி செய்தனர். உடனே ஆம்புலன்சை வரவழைத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு முத்தாம்பிகைக்கு 2-வதாகவும் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

ad

ad