புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தம் மூலம் 2009 இல் தமிழ் மக்களின் ஆயுத பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த அரசு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச்
சிதைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுச் செயற்பட்டது.
அவற்றில் ஒன்றுதான் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள். படையினரின் குடும்பங்கள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இன்று நிரந்தரமாகிவிட்டன.
பிரதானமாக யாழ். மாவட்டத்தில் மாதகல், தெல்லிப்பழை, பலாலி காங்கேசன்துறை, மயிலிட்டி போன்ற இடங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில், முறியண்டி போன்ற இடங்களிலும், மன்னார் மாவட்டத்தில் மடு, திருக்கேதீஸ்வரத்திலும், வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி, மாமடு, கனகராயன்குளம் போன்ற இடங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் பரவலாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, குடும்பிமலை போன்ற இடங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், நாயாறு முள்ளியவளை, தண்ணீரூற்று, இரணைமடு போன்ற இடங்களிலும் படையினரின் குடும்பங்கள் என்ற பெயரிலும் திட்டமிட்ட ரீதியிலும் பெருமளவு சிங்களக் குடும்பங்கள் படையினரின் ஆதரவுடன் குடியேற்றப்பட்டுள்ளன.
மஹிந்த ஆட்சியில் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குடியேற்றங்கள் இன்னும் தொடர்கின்றன. நல்லிணக்கம், நல்லாட்சி குறித்து அதிகம் பேசும் தற்போதைய அரசும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகிறது.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டமாகும். பிரதானமாக நாயாறு கிராமம் முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இராணுவ பாதுகாப்பு வலயத்திலுள்ள அப்பகுதிக்குள் தமிழ் மக்களோ, தமிழ் கிராம சேவகரோ நுழைய முடியாத நிலைமை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அங்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமும் மக்கள் முறையிட்டுள்ளனர். எனினும், எந்தவித இடையூறுமின்றி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துவிட்டன. என்றும், 299 சிங்களக் குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மீனவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கக் கட்டடம் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, புளியமுனை ஆகிய பகுதிகள் தென்னிலங்கை மற்றும் திருகோணமலை சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
யுத்தத்தின் பின்னர் இப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழுகின்றனர். சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தாம் தொழில் செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள மீனவர்கள் இயந்திரப்படகுகள், கூட்டு வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கின்றனர் என்றும் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன்குஞ்சுகளையும் அள்ளிச் செல்கின்றனர் என்றும் தமிழ் மீனவர்கள் முறையிடுகின்றனர்.
அதேசமயம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நாயாறு, நீராவியடி ஏற்றப்பகுதிகளில் தனது சுற்றுலா விடுதியையும் உப அலுவலகத்தையும் அமைத்து அப்பிரதேச பகுதியின் பெயரை மாயாபுர என்று மாற்றம் செய்து சிங்களக்குடியேற்றங்களைச் செய்ய முனைகிறது.
இதனைத் தடுத்து நிறுத்தும் படி வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடமாகாணசபையில் சமீபத்தில் முன்மொழிந்திருந்தார். ஆகவே, முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ad

ad