புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

நம்பிக்கை இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் : சிறீதரன் தெரிவிப்பு

என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முதலாவது மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வுகள் இன்றைய தினம் கல்லூரி மண்டபத்தின் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார். 

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி இந்துக் கல்லூரியானது வரலாற்றில் தடம் பதித்த மகத்துவமான பல மனிதர்களைத் தந்த, சந்தித்த ஒரு சிறந்த கல்லூரியாகத் திகழ்கின்றது. யோகர் சுவாமிகள் இந்தக் கல்லூரிக்குள் கால் பதித்த வரலாற்றினையும் அப்புஜீ அவர்கள் இக்கல்லூரிக்கு அதிபராக இருந்த வராற்றினையும் கொண்டுள்ளது. சர்வதேச விருதைப் பெற்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி போன்ற சிறந்த மனிதர்கள் கல்வி கற்ற கல்லூரியாகவும் இக்கல்லூரி திகழ்கின்றது.

இக்கல்லூரியில் நான் ஒரு மாணவனாகக் கல்வி  கற்ற காலகட்டத்தில், 1985 ஆம் ஆண்டு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினுடைய தலைவர் பழநெடுமாறன் அவர்கள் இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடைய மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வழிநடத்தலில் இக்கல்லூரிக்கு வருகைதந்திருந்தார். 

அப்போது அவர் எங்களிடம், இக்கல்லூரியும் இக்கல்லூரி மாணவர்களும் தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்திலே எப்படியான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்கள். இக்கல்லூரியின் புதல்வர்கள் பலர் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தம்மாலான பங்களிப்பைச் செய்து தம்மையே கொடையாக்கி இடம்பிடித்த மாவீரர்களாக நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பது வரலாறு. 

வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ள இக்கல்லூரியில் கல்வி கற்றதை நினைத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதையிட்டும் நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். இங்கு நடைபெற்ற மாணவர் பாராளுமன்றமானது மிகவும் சிறப்பாக இருந்தது. இப்பாராளுமன்ற உறுப்பினர்களான மாணவர்கள் கலந்துகொண்டு மிகவும் அருமையான விவாதங்களையும் தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தார்கள். 

இக்கல்லூரியினுடைய மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் சிறப்பாக அமைவதற்கு இக்கல்லூரியினுடைய அதிபர், ஆசிரியர்களது வழிநடத்தல்கள் மிகவும் சிறந்த முறையில் உள்ளது என்பதனை வெளிக்காட்டுகின்றது.

இன்றைய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் நாளை உலகத்தை ஆளக்கூடிய தலைவர்களாக திகழ்வீர்கள். அத்திறமை உங்களிடம் நிறைந்து காணப்படுகின்றது. உங்களது செயற்பாடுகள் வெற்றிபெற உங்களுடன் கூட இருந்து உங்களுக்கான பணிகளை எம்மால் இயன்றவரை செய்வோம் என மேலும் கூறினார். 

இந்நிகழ்வில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.விக்னராஜா, ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலை அதிபர் உமாசங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad