புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2016

நாங்க ரொம்ப நல்லவங்க எங்களை நம்புங்க!’
-ஈஷா மையத்தின் விளக்கம்!





பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத் தளங்களிலும் ஈஷா மையம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், ‘மையத்தில் ஒரு தவறும் நடக்கவில்லை’ என்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஈஷா! அதன் அறிக்கை இதோ -



ஈஷா மீதுள்ள குற்றச்சாட்டின் உண்மை நிலை…

நமஸ்காரம்,

கடந்த சில தினங்களாக ஈஷா அறக்கட்டளையின் மீதும் இங்கு துறவறம் பூண்டுள்ள இரு பெண்களின் மீதும் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எங்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. நன்கு படித்த, உயர்ந்த பொறுப்பு வகித்த பேராசிரிர் திரு. காமராஜ் அவர்களும், அவரது
துணைவியார் அவர்களும் இதனைச் செய்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஈஷா மீது கெட்ட எண்ணத்தை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு செயல்படுகிறார்களோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

கடந்த சில வருடங்களாய் ஈஷாவின் நற்செயல்கள் அனைத்திலும் தொலைகாட்சிகளும் பத்திரிக்கைகளும் மகத்தான் பங்கு வகித்துள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஊடகங்களின் ஈடுபாடு மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. இதனால், தன் வாழ்வில் மறுமலர்ச்சி கண்டோர் ஏராளம். எங்களது மனமார்ந்த நன்றிகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.


இம்முறை சான்றில்லா கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதன் மூலம் சில தவறான கருத்துக்கள் பரப்பட்டு வருகின்றன என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். ஒருசில முக்கியமான அம்சங்களை கூர்ந்து கவனித்து, அதன்பின் செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதனைச் சற்று ஆழமாய் பார்ப்போம்.

இரண்டு பெண்கள் சிறை வைக்கப்பட்டிருகிறார்கள்: துன்புறுத்தப்படுகிறார்கள்!

யார் இந்த 2 பெண்கள் – ஒருவர் மா. மதி (பழைய பெயர் கீதா, படிப்பு எம்டெக்), இன்னொருவர் மா. மாயு (பழைய பெயர் லதா, படிப்பு பிடெக்) இருவருமே நன்கு படித்து, நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள். தன் கால்களில் சுயமாய் எழுந்துநின்று, தற்சார்பு எண்ணம் கொண்ட பெண்கள். இவர்களைப் போலவே, இங்கு படித்தவர்கள் முதல் பாமரர் வரை பல பேர், ஈஷா யோக மையத்தில் தங்கி சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து பல கோடி பேர் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு ஆணிவேராய் இருந்து வருகிறார்கள். ஈஷா அறக்கட்டளை முழுக்க முழுக்க ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்பதும், உலகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளைக்கு தன்னார்வலர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.


ஒருவர் இங்கு தன்னார்வத் தொண்டு செய்ய வருவதும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டிற்கு திரும்புவதும் தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்ட ஒரு விஷயமாய் இருந்து வருகிறது. ஈஷா அறக்கட்டளையும் அதன் நிறுவனரும் யாரையும் எக்காரணத்தைக் கொண்டும் வற்புறுத்துவதோ கட்டாயப்படுத்துவதோ இல்லை என்பதை ஆணித்தரமாய் இங்கு பதிய விரும்புகிறோம். மேலும், யாரையும் அடித்தோ உதைத்தோ கட்டாயப்படுத்தியோ எந்தவொரு இடத்திலும் தங்கவைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பெண்கள் இருவரும் கடந்த 7 வருடங்களாக யோக மையத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அடித்து துன்புறத்தப்படுகிறார்கள் என்பதில் எள்ளளவும் உண்மையில்லை.

7000 பேரின் சிறுநீரகம் பறிக்கப்பட்டுள்ளது!

முற்றிலும் அடிப்படையில்லா, ஆதாரமில்லா ஒரு குற்றச்சாட்டு இது. இன்னும் சொல்லப்போனால் மையத்தில் தங்கியிருப்போர் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். போதைப் பொருட்கள் கொடுத்து மதி மழுங்கடிக்கப்பட்டுள்ளது ஈஷா யோகா வகுப்புகளின்போது சத்குரு அவர்கள் யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் எம்மாதிரியான விஷயங்களைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குறிப்பிட்டு சொல்வார்கள். யோகா செய்யும் முன் போதைப் பொருட்கள் எடுப்பதோ, புகைப்பதோ, மதுவினை பருகுவதோ கூடாது என்பவை அதில் அடங்கும். ஈஷா யோகா மையம் வழங்கும் யோக வகுப்புகளை பயின்று, அவற்றை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பல பேர் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து வெளிவந்துள்ளார்கள் என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன.


பல்வேறு சிறைக்கைதிகளின் வாழ்வில் ஈஷா யோக மையம் மறுமலர்ச்சி ஏற்படுத்தி  வருகிறது. யோக மையத்திலும் போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்காக மையம் வழங்கும் வரவேற்பு அட்டையில் இதனை காணலாம்.

பிரம்மச்சரியம் எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்!

ஈஷா யோக மையத்தில் யாரையும், எக்காரணத்திற்காகவும் பிரம்மச்சரிய பாதையில் செல்ல கட்டாயப்படுத்துவதில்லை. ஈஷா யோக வகுப்பு செய்துள்ள பல கோடி பேர்களில், வெறும் 207 பேர் மட்டுமே பிரம்மச்சரிய பாதையை தேர்வு செய்துள்ளனர். முறையாக விண்ணப்பித்து, தீவிர விருப்பம் காண்பித்த பின்னரே சந்நியாச தீட்சை வழங்கப்படுகிறது. சத்குரு அவர்கள் துறவறம் மட்டும் கொடுப்பதில்லை, குடும்ப வாழ்க்கையில் வாழ்வோர் சிறப்புடன் செயல்பட தேவையான அம்சங்களைத்தான் தன்னுடைய முதன்மையான கருத்தாக முன்வைக்கிறார். மையத்திலும் சரி, வெளியில் இருக்கும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பலருக்கும் அவரே திருமணம் செய்து வைத்தும் உள்ளார். மையத்தில் வாழும் 1627 பேர்களில் 207 பேர் மட்டுமே துறவிகளாக உள்ளனர்.


விவேகானந்தரை கொண்டாடும் நாம், நம்மைப் போன்ற ஒரு சகோதரி பிரம்மச்சரியம் எடுப்பதை எதிர்ப்பது ஏன்? புத்தரும் துறவிதான். காரைக்கால் அம்மையாரும் துறவிதான். நாம் கொண்டாடும் விவேகானந்தரும் துறவிதான்.

நம் கலாச்சாரத்திற்கு பிரம்மச்சரியம், சந்தியாசம் போன்றவற்றை யாரும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. தொன்றுதொட்டு நிலவி வரும் வழக்கம் இது. பல்வேறு சித்தர்களையும் யோகிகளையும் உருவாக்கி அவர்களை வழிபட்டு வரும் புண்ணிய பூமி இது. இந்து மதத்திலும், யோகப் பாரம்பரியத்திலும் மட்டுமல்ல, துறவறம் என்பது உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக இருந்து வருகிறது.

இந்தியா முழுக்க எத்தனையோ கன்னியாஸ்திரிகள் பள்ளிக்கூடங்களை நடத்தி வருவதும், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதும் நாம் அறிந்ததே! அவர்கள் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு, ஆனால் துறவறம் பூண்ட இந்த இரு பெண்களுக்கு வசைப் பேச்சா? ஈஷாவில் இருக்கும் பெண் துறவிகளை மட்டும் இப்படிப் பழிப்பது, பெண் உரிமையை நசுக்குவதோடு மட்டுமில்லாமல், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்யப்படும் செயல்களாகவே பார்க்க முடிகிறது. பெண்கள் திருமண வாழ்க்கையில் மட்டுமில்லாமல் ஆணுக்கு சரிநிகர் சமானமாய் செயல்பட முடியும் என்பதை ஈஷா பல வழிகளில் நிரூபித்து வருகிறது. இங்குள்ள யோக ஆசிரியர்கள் பெண்கள், ஆசிரம நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்கள், ஈஷாவில் நடைபெறும் பிரம்மாண்ட விழாக்களை ஒருங்கிணைப்பது பெண்கள் என மையத்தில் முக்கியமான பல பொறுப்புகளை பெண்கள் சுமக்கிறார்கள். இது பெண் முன்னேற்றம். இது பேதமில்லா அணுகுமுறை.

இருவேளை உணவு!

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட சாத்வீக உணவு, யோக மையத்திற்கு வரும் அனைவருக்கும் பரிமாறப்படுகிறது. இரு வேளையும் இயற்கைச் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பதார்த்தங்கள் வழங்கப்படுகின்றன. சிறுதானியம் பற்றி பரவலாய் எல்லா இடத்திலும் பேசப்பட்டாலும் யோக மையத்தில் சிறுதானிய உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், மையத்திற்கு உள்ளேயே ஒரு உணவகமும் ஒரு கடையும் இருக்கின்றன, தேவைப்படுவோர் அதில்கூட வாங்கி உண்ணலாம். மேலும், இங்குள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மூன்று வேளை
உணவுடன் இடையிடையே ஆரோக்கியமான தின்பண்டங்களும் வழங்கப்படுகிறது.

வசிய எண்ணெய்!

இதை படிக்கும்போது நகைப்பே மிஞ்சுகிறது. எல்லோரையும் போல தலைக்கு எண்ணெய் தேய்த்து கொள்ளும் பழக்கம் மையவாசிகளிடமும் உண்டு, தரமான தேங்காய் எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. அதுமட்டுமல்ல, வழிவழியாக வீட்டுச் சூழ்நிலையை மங்கலமாய், சுத்தமாய் வைத்துக்கொள்ள நினைக்கும் அனைவரும் சாம்பிராணி பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதில் வசிய மருந்தும் இல்லை, மயக்கும் பொடியும் இல்லை.


பெண்களின் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது!

ஈஷா யோக மையத்திலுள்ள பெண்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். உடலியல் சார்ந்து நடைபெறும் அனைத்து மாற்றங்களும் அவர்களுக்கும் உண்டு. ஒரு எளிமையான பரிசோதனையின் மூலம் இதனை நாம் நிரூபித்துவிட முடியும். “கர்ப்பப் பையை நீக்குகிறார்கள்,” என்ற சொற்கள் யாவும் ஆதங்கத்தில் புலம்பும் பெற்றோரின் ஆற்றாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

3000 பேர் கோமா நிலையில் இருக்கிறார்கள்!

3000 பேர் கோமா நிலையில் இருந்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய வழக்காக கருதப்படும் என்பதை நாம் மறக்கவேண்டாம். ஒவ்வொரு தேசமும் இவற்றைப் பற்றி விவாதிக்கும், மாறாக, ஈஷா யோக மையத்திற்கு வந்து செல்லும் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பதாக, ஆரோக்கியம் திரும்பக் கிடைத்திருப்பதாக, நிம்மதி அடைந்திருப்பதாக, செயல்திறன் அதிகரித்திருப்பதாக சொல்வதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஈஷா யோகா பயிற்சிகளின் வல்லமையை நிரூபிக்க போதுமான அறிவியல் ஆராய்ச்சிகள் உள்ளன.

இதுபோல் உணர்ச்சி பெருக்கால் பெற்றோர் ஈஷா அறக்கட்டளையின் மீது அடுக்கடுக்காய் சுமத்தும் பல குற்றச்சாட்டுக்கள் ஆதாரமில்லாத, ஜோடிக்கப்பட்ட, மையத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடு சில தீயசக்திகளின் தூண்டுதலால் வெளியிடப்படும் தகவல்கள் என்பதை இங்கு அழுத்தமாக பதிவிட விரும்புகிறோம்.

இதுபோன்ற தகவல்கள், புரளிகள் ஆதாரமில்லாமல் வெளியிடப்படுவது – சுய ஆர்வத்தினால், மற்றவர்களுக்காக, ஆனந்தமும் பெருமையுமாய் நாங்கள் வாழ்வதை அவமதிப்பதற்கு ஈடாகும். ஒரு வருடத்தில், பல லட்சம் பேர் மையத்திற்கு வருகை தருகிறார்கள், இங்குள்ள சூழ்நிலையில் லயித்து வீடு திரும்புகின்றனர். உங்கள் அனைவருக்கும் ஈஷா யோக மையத்தின் வாசல்கள் திறந்தே இருக்கின்றன.


பல கோடி மக்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தை தோற்றுவித்திருக்கும் ஈஷா, யாருக்கும் ஊறு விளைவிக்கும் நிறுவனம் அல்ல. தன் கல்விச் சேவைகளின் மூலம் 79,000 ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியும், பசுமைக்கரங்கள் திட்டம் மூலம் தமிழகத்தை பசமை மாநிலமாக்கும் முயற்சியில் 2.8 கோடி மரங்களும் நடப்பட்டுள்ளன. பசுமை திட்டத்திற்கான இந்தியாவின் உயர்ந்த விருதினை ஈஷா பெற்றுள்ளது. ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் தமிழகத்திலும் ஆந்திரத்திலும் 4600 கிராமங்களில் ஈஷா பணி செய்துள்ளது. இதன்மூலம் இலவச மருத்துவ உதவி, கிராமங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், வாழ்க்கைத்தர மேம்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படிச் சமுதாய மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து, துரிதமாக செயல்பட்டு வரும் ஒரு தொண்டு நிறுவனம், ஈஷா அறக்கட்டளை. இதனால், ஊடக அன்பர்களையும், பொது மக்களையும் ஈஷா மையத்திற்கு வந்து, தங்கி இங்கு நடப்பவற்றை உங்கள் கண்களால் கண்டு உண்மை உணர வேண்டும், பொய்யான கருத்துக்களை நம்ப வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படி ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறது ஈஷா மையம்!

ad

ad